வியாழன், 15 ஜூன், 2017

வடையின் விலையை கேட்டால் உழுந்து விலையை சொல்கிறார்கள் - பயணிகள் கவனத்திற்கு..



A9னில் இரவு உணவகங்கள்
எதற்காக திறந்திருக்கின்றன.

பார்க்க பஸ் தரிப்பிடங்கள் போல்
காட்சியும் தருகின்றன.

ஓட்டுணரையும் நடத்துணரையும்
பின் அறைக்கு கூட்டிப்போய் பிரியாணி
கொடுக்கிறார்கள் .

பயணிகள் "பணீஸ் " வாங்கவும்
வரிசையில் நிற்கிறார்கள் .
'ஏதோ கட்சித் தொண்டர்கள் போல கை நீட்டிக்கொண்டு"

மீதி காசுக்கு "ரொபி" கொடுக்கிறார்கள்
பிளேன்ரிக்கும் "ரோக்கன்" கொடுக்கிறார்கள் .

வடையின் விலையை கேட்டால்
உழுந்து விலையை சொல்கிறார்கள்.

சாப்பாட்டை வாங்கி முதல்
வாய் வைக்கையில் சாப்பிட்டு முடித்துப் போன
ஓட்டுணர் "கோண் " அடிக்கிறார் .
"பயணிகள் பாதியில் ஓடுகிறார்கள்"

ஒரு வேளை விட்டுப் போகும் இந்த மீதி
உணவுகள் தான் அடுத்த பஸ்சில் வரும்
பயணிகள் சாப்பிடுகிறார்களோ...

சிலவேளை இதுதான்
பின் அறையின் பிரியாணியோ...

நெடுந்தீவு முகிலன்
கணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை


திருமணத்துக்கு முன்னும் பின்னும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்கள் வாழும் சமுதாயத்தின் மரபும் சூழலுமாகும். இவ் இரு காரணங்களால்தான் விதவை நிலையும் பரத்தமையும் நாட்டின் பிரச்சனைகளுள் தீர்க்க வியலாதனவாக நிலவுகின்றன. கணவனை இழந்த பெண்ணுக்கு சமுதாயம் வலியுறுத்தும் வேறு பட்ட வாழ்வே வாழ்கை நெறியாக அமைந்து விடுகிறது. இவள் மங்கலமான வாழ்வை மட்டுமே இழக்கிறாள். ஆனால் கடந்த கால இனிமையான வாழ்வை இழக்காது தவிக்கிறாள். உரிமை வேட்கையுடைய சமுதாயத்தில் மெல்ல மெல்லவாவது விதவையின் வாழ்வும் மலரத் தொடங்க வேண்டும்.
ஒருத்திக்கு ஒருத்தன் என்னும் உயரிய குறிக்கோளை இளமை காலங்களில் பெண்களின் மனதில் பதியுமாறு முன்னோர் கற்ப்பித்தனர்.. கணவன் இறந்தால் தூய வெண்ணிற ஆடையினை அணிதலும் பூ பொட்டு அணிகலன்களை அணியாது தவிர்த்தலும் தலை முடியினை மழித்துவிடுதலும் உணவு முறையில் மாறுதல் ஏற்ப்படுத்தி கொள்ளதலும் அன்றைய சமுதாயத்தில் விதவைக்கு வழக்கமாக இருந்தது.
விதவை வாழ்வுக்குரிய காரணம் விதியின் பெயராலும் மரவு வழி வந்த சடங்குகளாலும் நிலவும் கொடுமை எனப்படுகின்றது. இவர்களின் வாழ்க்கை துயரம் நிறைந்துள்ளது "விதியை ஏற்றி வந்த பல்லவனும் சம்பிரதாயங்களை ஏற்றி வந்த குதிரை வண்டியும் முட்டி மோதி கொண்டதில் தாலிப்பாலம் தகர்ந்து விட்டது வாழ்க்கைச் சந்தையில் பூ வாங்க போய் நார் கூட வாங்க முடியாமல் துயர ஊர் திரும்பிய துர்ப்பாக்கிய சாலிகள்" என்றாகி விட்டது இவர்களின் வாழ்கை விதியின் மேல் கொண்ட சம்பிரதாய மரபு போன்றவையால்தான் விதவையர் வாழ்வில் துயரம் மேலோங்கியுள்ளது. என்று கூறலாம்.
இவர்கள் வாழ்வில் எத்தகைய துயர நிலை நிலவுகிறது என்பதினை புதுக் கவிஞர்கள் பலரும் பாடியுள்ளார்கள். அன்றைக்கு பிருந்தாவனத்தில் ஆயிரக்கணக்கான கோபியர்கள் கண்ணணோடு மகிழ்சியாக இருந்த அந்த நிலை முற்றிலும் மாறி ஏழை விதவையர் அடுத்த வேளை உணவை எண்ணி ஆதரவற்றவர்களாக அனாதைகளாக ஆசிரமங்களில் சரண்புகுகின்றனர். பக்தியை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக பயனை செய்கிறார்கள் என்கிறார். இரா.கதைப்பித்தன் வெள்ளாடை தரித்து மனதில் உள்ள ஆசைகளையும் விரட்டிய இவ்விதவை நட்சத்திரங்களுக்கு இரவு இல்லால் போய்விட்டது. இவர்கள் வாழ்வில் வசந்தத்தை இனி எதிர்நோக்க முடியாத பட்ட மரங்கள். கூவ முடியாத குயில்கள் மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கம் கோபம் என்பதனை வெளிப்படுத்த தெரியாதவர்கள். தங்கள் ஆடையின் மூலமாகவே விதவைகள் என்பதனை சொல்லாமல் சொல்லி கொள்வார்கள். இவர்கள் வாழ்வின் வெறுமையிலேயே முடிப்பார்கள். கணவன் வாழ்ந்த காலத்தைப் போலவே மடிந்த பிறகும். அவன் நினைவாகவே வாழ வேன்டும் என்பது மரபான கருத்து.
கடந்த காலத்தில் மஞ்சளில் குளித்து மஞ்சத்தில் மகிழ்ந்து போன்ற பல்வேறு இன்ப நிகழ்சிகள் இப்போது முடிந்து விட்டது. இவர்கள் சமுதாயமெனும் வீணையில் அறுந்துபட்ட நரம்புகள். மங்கலகரமான பொட்டடினை இழந்தவர்கள். உயிரெழுத்து போன்ற தலைவனை இழந்து விட்ட மெய் எழுத்து போன்றவர்கள். புகை வண்டிக்கு பொறி (இங்சின்) எவ்வாறு இன்றியமையாததோ அதுபோல ஒரு பெண்ணின் வாழ்க்ககையில் கணவன் முக்கியமானவன் . விதவையர் அத்தகைய பொறியினை இழந்த விட்ட இணைப்புபெட்டிகள். கணவனை இழந்து விட்ட சோக இழப்பினால் நைத்துருகும் நெஞ்சினர். முகவரியினை காணாமல் தொலைத்துவிட்டு முனகுகின்ற மடல்கள் குவிந்திருக்கம் கொடி மரத்தை ஒத்தவர்கள். இருள் வாழ்விலேயே வாழ்வை நடத்தும் வெள்ளாடை வெளிச்சங்கள் . பெண் இழ வயதிலே விதவையானால் அது துன்பம் மிக்க கொடுமையானதாகும். இவள் வாழ்ந்து பெறாத இன்பத்தை எண்ணி எண்ணி ஏங்கி கண்ணீர் வடிப்பாள். ஆசைகளை இதய தீயில் நாழும் எரிப்பாள். அவள் பருவ மழையில் அழிந்து விட்ட பயிர். பாட முடியாத ஊமைக்குயில். இனியாரும் படிக்கவியலாத பாடநூல் என பலவேறு முகாரிகள் சமுதாயத்தில் மீட்டப்பட்டுகொண்டிருக்கிறது. கவிஞர்கள் பெண்ணை பூவிற்கு ஒப்பிடவது வழக்கம். அனைத்து பூக்களையும் ஒன்றாக கருதாமல் விதவை பூ என்று ஒன்று இல்லாது இருப்பதை உணராதது ஏனோ....
சமுதாயத்தில் தாலி இழந்த விதவை பூக்களுக்கு சோகமே துணையாக அமைந்து விடுகின்றது. விதவைச் சமுதாயம் "தாலி அறுத்தவள்" என ஒதுக்கி வைத்திருப்பதனை இன்றைய நடமுறை வாழ்க்கையிலும் காணலாம். எந்த விதமான மங்கல நிகழ்ச்சிகழுக்கும் அவளின் தலையீடு இல்லாமலே இருக்கும். அவளுடைய இல்லத்தில் நடைபெறும் அத்தகு நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை ...நற்க்காரியங்களுக்கு செல்கையில் எதிரே வந்தால் தீநிமித்தமாக கருதப்படுவாள். கணவனை இழந்த ஒருத்தி தொடர்ந்து அழுவதும் தாலி அறுக்கும் சமயத்தில் மகளிர் அவளது பொட்டினை அழிப்பதும் கைவழயல்களை நெருக்குவதும் வழக்கம். அத்தோடு சேர்ந்து அவள் புறக்கணிக்கப்படுதலும் உரிமைகள் மறுக்கப்படுவதும் தொடர ஆரம்பிக்கிறது. இத்தகு பெண்கள் மனதளவில் மாறிவிட்டால் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்..
விதவை என்பவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை... எனவே அம் மரம் மீண்டும் தழைப்பதற்கு வழி உண்டு. வெள்ளை உடை என்பது ஒருவரின் தூய்மையை குறிப்பதாகும். துயரத்தின் அடையாள சின்னமன்று. எனவே வெள்ளை உடையில் உள்ள பெண் மக்களை வண்ண உடையில் குடியமர்த்தலாம். ஒரு மறு மலர்சி உருவாகி அதன் வழி விதவையர் வாழ்வில் ஒரு நற்காலம் உருவாக வேண்டும். அத்தகைய மறுமலர்சி காலம் வரும் வரை அவர்கள் நெற்றியில் பொட்டினை காணமுடியாது. " ஒரு புரட்சி திரு நாளில் ஓடும் குருதியில் இருந்து குங்குமம் திரட்டிக்கொண்டு வந்து விதவை நெற்றியில் வெற்றி திலகம் இடும் வரை நான் அழிக்கப்பட்ட திலகம்தான் ஆனால் என் அடிச்சுவடகள் அழிவதில்லை" என்ற செல்வ கணபதியின் கவிதை திறம்பட சொல்கிறது.
இன்று பெரும்பாலும் வாலிபர்கள் திருமணமாகாத மங்கையர்களையே மணம்முடிக்க நினைக்கிறார்கள் அவ்வாறு இருக்கையில் விதவையை மணந்து வாழ்வழிப்பது என்பதை இயலாத காரியம் என்ற கருத்தினை "கன்னியின் மடியிலேயே கைவைக்கம் கரங்களா... வெள்ளை நெற்றிக்கு வெள்ளிச் சிமிழ் திறப்போம்" என்று மதுமாலிகா அழகாக சொல்லியுள்ளார். எனவே இம் மன நிலையை உவந்து மாற்றிக்கொண்டு விதவையர்கும் வாழ்வு தரும் வலிமையை இளைஞர்கள் பெருக்கிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நூல்களாக மட்டும் தொகுக்கப்படாமல் நிஐமான தாலிகயிறாகவும் மாற வேண்டும்.


நெடுந்தீவு முகிலன்




தமிழர்களை பின்தொடரும் அவலம்
-------------------------------------------------------------------------------

ஏனையின் வீதியை திறந்து விட்டீர்கள் - யாழ்
தேவி ரெயிலையும் ஓட விட்டு தான் பார்க்கிறீர்கள்.

தமிழர்களுக்கான போக்குவரத்து சேவை அபிவிருத்தி 
முற்றாக நிறைவுற்று விட்டதாகவும் தகவல் பரப்புகிறீர்கள்.

நாளாந்தம் நாம் சிந்தும் கண்ணீர் துளியினை - ஏனோ
கண்டு கொள்ளாமலே இருக்கிறீர்கள்.

யாரோ வைத்த கண்ணிக்குள் எம் இனம் அகப்பட்டு
கொண்டிருப்பது போலிவேதான் இருக்கிறது.

பெரும் துயரிருந்து இப்போதுதான் ஓரளவு ஓய்ந்து
காணாமல் போனவர்களை தேடிக் கொண்டும் - கூட
இருப்பாவர்களை தேத்திக் கொண்டும் இருக்கின்றோம்.

தற்சமயம் நடு வீதிகளில் நம்மவர்களின்
எலும்பையும் தோலையும் சதையையும்
கூட்டி அள்ள வேண்டி இருக்கிறது.

எல்லா இணையத்தளங்களிலும் எம் முண்டங்களே 
முக்கிய செய்தியாகவும் பகிரப்படுகிறது.

போரில் தொலைந்த கணவன் எப்போவாவது
வீடு வருவான் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் 
சகோதரிகள் மத்தியிலே - லொறியில் மோதிய புருசன்
இனி வரமாட்டான் என்று தாலியை அறுக்கும்
நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

யாரோ வைத்த பொறியிலே நாம் சிக்கி 
தவிப்பது போலவேதான் இருக்கிறது

நாட்டின் ஏனைய பகுதியிலோ விதியிலோ 
பிரச்சனை இல்லையே என்று நாம் புலம்பவில்லை...
தமிழர் தெருவில் மட்டுமே ஏன் இந்த அவலம்
தொடர்ந் கொண்டிருக்கிறது என வருந்துகிறோம்.

கடவைகள் சரியில்லையா அல்லது சாரதிகள் 
சரியில்லையா என்ற வாக்குவாதத்திற்கு வரவில்லை
ஐநூறை ஆயிரத்தை வாங்காமல் கடமையை 
சரியாக செய்யலாமே என்று சொல்லுகின்றோம்.

வேக கட்டுப்ட்டை இழந்து இரு சில்லு வாகனத்தோடு
பிடி பட்டவர்களிடம் பணத்தை வாங்கி விட்டு தயவு
செய்து நாலு சக்கர வாகனத்துக்கு தடக் கொள கொடுக்க 
வேண்டாம் என வேண்டுகின்றோம்

தந்தையை தாயை இழந்து வாழும் குழந்தைகளை 
பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது. - மேலும்
சுமைகளை எம்மிலே சுமக்க விடாதீர்கள்.

இருந்தாலும் யாரோ விரித்த வலைக்கு நாம்
இரையாக்கப்படுவது போலவேதான் இருக்கிறது.

மரணம் எல்லோருக்கும் நிச்சயம் தான்
என்றாலும் நடு வீதியில் உயிரை விட
எமக்கு எந்த அவசரமுமில்லை...

வீதி ஒழுங்கை யார் மீறுகிறார்களோ 
அவர்களை சிறைப்பிடியுங்கள்.

தண்டப் பணம் அறவிடாமல் 
தகுந்த தண்டனை கொடுங்கள்

முடிந்த அளவு ரயில் வரும் போது
கடவைகளில் தடை போடுங்கள்.

பணத்துக்காக ஓட்டுனர் பத்திரம் வழங்குபவர்களே
இனியாவது ஒதுங்கி கொள்ளுங்கள்.

குடிகார சாரதிகளே கொஞ்சம்
எங்களை வாழ விடுங்கள்.

வயது வர முதலே சகோதரங்களுக்கு வாகனம்
வாங்கிக் கொடுக்கும் வெளிநாட்டவர்களே 
ஓரளவு புரிந்து கொள்ளுங்கள்.

ஆனாலும் எம் இனத்துக்கு யாரோ ஏவி 
விட்டது போலவேயே இருக்கிறது.

நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டி 
இருக்கிறது - ஆனால் இந்த சின்ன பிரயாணங்களில்
உயிரை விட்டு எம் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.


நெடுந்தீவு முகிலன்

கல்
--------

நடந்து கொண்டிருக்கையில் ஒரு சிறு கல்
என் காலில் மோதி கிண்ணி விரலை கிழித்தது.

கல்லின் மீது எனக்கு கோபம் ஏற்பட்டாலும்
பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போடவே
அப்போது நேரமும் சரியாக இருந்தது.

பாறையில் ஊர்ந்து நத்தைகள் வாழ்கின்றன
மலைகளின் மேலே பாம்புகள் பறவைகள் வாழ்கின்றன.

நான் வாழும் வாடகை வீடும்
கல் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடைசியில் நான் புதைக்கப் பட போவதும்
கல் அறையினில் தான்

ஆதலால் அந்த கல்லை நான்
அன்று திட்டவே இல்லை...

விண்ணில் இருந்தும் கல் விழும்
என்று விஞ்ஞானம் சொல்கிறது.

கிட்னியிலும் கல்லு இருக்கிறது என்று
மருத்துவம் நிருபிக்கிறது.

இதனால் அந்த கல்லை இன்று
பழி வாங்க யோசித்தேன் - ஆனாலும்
முடியவில்லை...

சேர்திருக்கும் சில மனிதர்களுக்கோ
இதயம் கல்லாய் இருக்கிறது.
நாம் வழிபடும் பல தெய்வங்களோ
கல்லாகவே இருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

முட்கம்பி வேலியாலும் மண் மூட்டைகளாலும் சுற்றி
அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் குடிசை.
யாரும் நெருங்கி வராத படி மிதி வெடிகளும்
தாக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டன் காலத்து குடிசை அது - அந்த
குடிசைக்குள்தான் நாம் குட்டிகளாக ஈணப்பட்டோம்.
சாணி மொழுகிய திண்ணையின் வாசலில் அம்மா
போடும் மாக் கோலத்தின் அடையாளம் இருக்குமா..
.
தூசி படிந்தாவது அப்பாவின் புகைப்படம் - இப்பவும்
சுவரில் தொங்கிக் கொண்டிருக்குமா...
தேங்காய் எண்ணை தடவி வைத்த மண்வெட்டி
பிக்கான் கத்தி அரிவாள்களாவது அப்படியே இருக்குமா...
கறையான் அரித்து திண்டாலும் பறவாயில்லை
அடகு சீட்டுகளின் - திருமண சான்றிதளின்
பள்ளிக்கூட ஆவணங்களின் - பிறப்பு பத்திரங்களின்
ஏதேனும் அடித்துண்டுகளாவது மிஞ்சி இருக்குமா..
அக்காவுக்கு நிறுவனக்காரர்கள் தந்த தையல் மிசின்
நான் முதல் மாத சம்பளத்தில் வாங்கி வைத்த கண்ணாடி அலுமாரி
அறையின் மூலையில் கிடந்த நாற்காலி கோர்க்காலி கோழிக் கூடு
ஏதாவது எமக்காக இருக்குமா...?
"இன்னும் நாம் எங்கள் குடிசைக்கு செல்லவில்லை" - ஆனாலும்...
எங்கள் குடிசை முட்கம்பி வேலியாலும் ... மண் மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதாம்.
நெடுந்தீவு முகிலன்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016


கரப்புக்குள் கோழியும் குஞ்சும்  குறுணால் அரிசியையே பங்கிட்டு தின்கிறது.
என் வளவுக் கடப்பை திறந்து எனைக் கான வரமாட்டாயா...

உமிக் கரியில் பல் விளக்கி  தென்ணோலை கிழித்து நாக்கு வளித்து
முடியை மிளித்திளுத்து சேலைத்தலைப்பால் முடிந்துகட்டி காத்துக்கிடக்கிறேன்.

பூக்கம் பாளையால் முற்றம் பெருக்கி  மஞ்சல் கரைத்து தெழித்து - கறி கழுவும்  இடத்தில் நட்டு வழர்த்த கறிவேப்பிலை மரமாய்  வாசனையோடு பூத்திருக்கிறேன்.

சாணி மொழுகிய திண்னையில்  திருவலையில் உன்னை இருத்தி
வாழையிலையில் கை குத்தரிசி சோறு  போட ஏங்கி நிற்கிறேன்.

செத்தைக்குள் சொருகிக் கிடக்கும் கடுதாசிகளிலே  என் ஆசைகளை கிறுக்கி விட்டு - சுடு தேத்தண்ணியில்  விழுந்த கட்டெறும்பாய் துடித்துக்கொண்டிருக்கிறேன்.

கோர்காலியில் விரித்த சாய் ஓலை பாயோடும்  தலைக்கு வைக்கும் உடுப்பு பொட்டாளியோடும்  நூந்து போன போத்தில் விளக்கோடும்  என் இரவுகளை கடக்கின்றேன்.

சாமத்தில் படலையில் மாடு முட்டினாலும்  நீ தான் என்று - என் கண் விழித்த பின்புதான்  நாயே குரைக்கும்.

நெடுந்தீவு முகிலன்
கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்  அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில்  மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து  இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்