வியாழன், 25 ஆகஸ்ட், 2016

முட்கம்பி வேலியாலும் மண் மூட்டைகளாலும் சுற்றி
அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் குடிசை.
யாரும் நெருங்கி வராத படி மிதி வெடிகளும்
தாக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டன் காலத்து குடிசை அது - அந்த
குடிசைக்குள்தான் நாம் குட்டிகளாக ஈணப்பட்டோம்.
சாணி மொழுகிய திண்ணையின் வாசலில் அம்மா
போடும் மாக் கோலத்தின் அடையாளம் இருக்குமா..
.
தூசி படிந்தாவது அப்பாவின் புகைப்படம் - இப்பவும்
சுவரில் தொங்கிக் கொண்டிருக்குமா...
தேங்காய் எண்ணை தடவி வைத்த மண்வெட்டி
பிக்கான் கத்தி அரிவாள்களாவது அப்படியே இருக்குமா...
கறையான் அரித்து திண்டாலும் பறவாயில்லை
அடகு சீட்டுகளின் - திருமண சான்றிதளின்
பள்ளிக்கூட ஆவணங்களின் - பிறப்பு பத்திரங்களின்
ஏதேனும் அடித்துண்டுகளாவது மிஞ்சி இருக்குமா..
அக்காவுக்கு நிறுவனக்காரர்கள் தந்த தையல் மிசின்
நான் முதல் மாத சம்பளத்தில் வாங்கி வைத்த கண்ணாடி அலுமாரி
அறையின் மூலையில் கிடந்த நாற்காலி கோர்க்காலி கோழிக் கூடு
ஏதாவது எமக்காக இருக்குமா...?
"இன்னும் நாம் எங்கள் குடிசைக்கு செல்லவில்லை" - ஆனாலும்...
எங்கள் குடிசை முட்கம்பி வேலியாலும் ... மண் மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதாம்.
நெடுந்தீவு முகிலன்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016


கரப்புக்குள் கோழியும் குஞ்சும்  குறுணால் அரிசியையே பங்கிட்டு தின்கிறது.
என் வளவுக் கடப்பை திறந்து எனைக் கான வரமாட்டாயா...

உமிக் கரியில் பல் விளக்கி  தென்ணோலை கிழித்து நாக்கு வளித்து
முடியை மிளித்திளுத்து சேலைத்தலைப்பால் முடிந்துகட்டி காத்துக்கிடக்கிறேன்.

பூக்கம் பாளையால் முற்றம் பெருக்கி  மஞ்சல் கரைத்து தெழித்து - கறி கழுவும்  இடத்தில் நட்டு வழர்த்த கறிவேப்பிலை மரமாய்  வாசனையோடு பூத்திருக்கிறேன்.

சாணி மொழுகிய திண்னையில்  திருவலையில் உன்னை இருத்தி
வாழையிலையில் கை குத்தரிசி சோறு  போட ஏங்கி நிற்கிறேன்.

செத்தைக்குள் சொருகிக் கிடக்கும் கடுதாசிகளிலே  என் ஆசைகளை கிறுக்கி விட்டு - சுடு தேத்தண்ணியில்  விழுந்த கட்டெறும்பாய் துடித்துக்கொண்டிருக்கிறேன்.

கோர்காலியில் விரித்த சாய் ஓலை பாயோடும்  தலைக்கு வைக்கும் உடுப்பு பொட்டாளியோடும்  நூந்து போன போத்தில் விளக்கோடும்  என் இரவுகளை கடக்கின்றேன்.

சாமத்தில் படலையில் மாடு முட்டினாலும்  நீ தான் என்று - என் கண் விழித்த பின்புதான்  நாயே குரைக்கும்.

நெடுந்தீவு முகிலன்
கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்  அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில்  மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து  இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்
வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

தலையில் ஒரு குடம்
இடுப்பில் ஒரு குடம்.

தாகத்தோடு குடிசையில் தவிக்கும்
தன் குழந்தைகளை நினைத்து கொண்டே
ஓட்டமும் நடையுமாக ஒருத்தி...

வியர்வை துளிகளில் நனைந்தாளோ...
கண்ணீர் துளிகளால் தன்னை கழுவினாளோ - இல்லை  குடத்திலிருந்த தண்ணீரின் தளம்பலில்  மூழ்கிப்போனாளோ தெரியவில்லை  பாதி ஈரத்தோடும் ஏதோ அவசரத்தோடும் சுடு மணலில் நடந்துகொண்டிருந்தாள்.

அவள் வீட்டு வாசலை அண்மிக்கையில்..
.
குழந்தைகள் ஆழுக்கொரு பாத்திரத்தோடு  வயதுக்கேற்ற வரிசையாய் ஓடி வந்தனர்.

அப்போது மழை பொழிந்தது....

குழந்தைகளின் பத்திரங்கள் வானத்தை  நோக்கியே அண்ணாருகின்றன.

அந்த ஏழைத்தாயை வருத்திய துயரை நினைத்து வானமே அழுதது - ஆனால்
மனிதர்கள்..?..?...?

நெடுந்தீவு முகிலன்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

குண்டு மழைக்கு யார் குடை பிடிப்பது
இரத்தத்தில் நனைந்த இனம் நாம்.

எதிரிகளின் தாக்குதலினை முறியடித்தோம் - துரோகிகளின்
காட்டிக்கொடுப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டோம்.

குருவி சுட தெரியாதவனெல்லாம் எங்கள் குரல் வளைக்கு குறி வைக்க ஏங்கி நின்றோம்.

பிணங்களை கடந்து போகும் பயணத்திலும் பாதிப் பேர்
ஊணங்களாக்கப்பட்டுக்கொண்டே இடம்பெயர்தோம்.

தோட்டாக்களினதும் பீரங்கிகளிதும் சத்தத்துக்கு பாதிக்கப்பட்ட
நமக்கு நச்சு வாயு புது பாடமாகவே இருந்தது.

உடமைகளோடு ஓடி வந்தோம் - கொஞ்ச தூரத்தில் அவைகளை விட்டு உறவுகளோடு ஓடினோம் அதுக்கு பிறகு உயிரோடு மட்டுமே ஓடினோம்

சரணடைய கை தூக்கியவர்களும் பாதுகாப்புக்காய் வெள்ளை கொடி காட்டியவர்களும் சுடப்பட்டார்கள். எஞ்சியவர்களில் சந்தேகமானவர்கள் எல்லைகளில் வைத்தே களையப்பட்டார்கள்.

கடத்தி சென்றவர்களையே... காணாமல் போனவர்கள் என்று கேட்க்கின்றோம் - அது பழைய காக்கா பாட்டியை
ஏமாத்திய வடைக் கதை என...புதிய நரிகள் கதை சொல்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்
கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்
அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை
விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில் மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து
இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை
கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்
என் சாவுக்கு யாருமே சம்மந்தமுமில்லை
இது என் சுய விருப்பமே...

நான் நிரந்தரமாகவே உறங்க ஆசைப்படுகிறேன்

அவசரத்தில் எடுத்த முடிவு கிடையாது - ஆழ்ந்த
யோசனையின் பின் நான் எனக்கு கொடுக்கும் விடிவு

என்னை இறுதியில் என் ஊர்சாலை
வழியாகவே....கொண்டு செல்லுங்கள்.

எனக்காக எவரும் அழவேண்டாம் - நான்
எவ்வளவோ அழுதான் இந்த தீர்வுக்கே வந்தேன்

ஒரு வேளை சில....அனுதாப விழிகள்
எனக்காக அழதால் கைக்குட்டை கொடுத்து சமாளியுங்கள்.

எனக்காக மலர்வளையங்கள் வேண்டாம். வீணாய் பூக்களை கொலை செய்யாதீர்கள் - அதுகளாவது நின்மதியாய் ஒரு நாளாவது வாழட்டும்.

கண்ணீர் பதாதைகள் ஒட்ட வேண்டாம். - அண்ணாந்து பித்து தின்னும் பசுக்களின் குடலில் ஒட்டுவதோடு  பால் குடிக்கும் கன்றுக்குட்டிகளுக்கும் உபாதைகள் ஏற்ப்படக் கூடும்.

இது வரை என் வேதனைகளை வேடிக்கை பார்த்தீர்கள் - முடிந்தால்
நான் முடிவில் விட்டுப்போகும் எலும்புக் குவியல்களுக்காவது
சுதந்திரம் கொடுங்கள்.

நான் இந்த முடிவுக்கு முயற்சித்ததே.... அடுத்த பிறவி இருக்கு என்ற நம்பிக்கையில் அல்ல  என் நின்மதிக்காகவே - ஆனாலும் என் நின்மதி நிரந்தரமானதல்ல... எப்படியாவது நீங்களும் அங்கு வந்து விடுவீர்களே...


நெடுந்தீவு முகிலன்
அதிகாலையில் எழுந்து அடுப்பு பத்தவைத்து

சூடான தேநீர் தயாரித்து 
தலைமாட்டில் வைத்து

பிள்ளைகளை தடடித்தடவி எழுப்பி

பாடப்புத்தகங்களை எடுத்துக்கொடுத்து

கணவனின் உடைகளுக்கும் சேர்த்து ஸ்திரி போட்டு

மறுபடியும் அடுப்படியில் புகை ஊதி ஊதி காலை சாப்பாடும் சரி செய்து

குழந்தைகளை குளிப்பாட்டி உணவூட்டி உடுப்புடுத்தி

பள்ளிக்கு அனுப்பிவிட்டு

தண்ணீர் இல்லாவிட்டால் - மின்சாரம் தடைப்பட்டால் கணவனின் திட்டுகளையும் சமாளித்து

வீடு வளவு சுத்தம் செய்து

பழைய பாத்திரங்கள் கழுவி

வெயிலிலும் நடந்து சந்தைக்குப்போய் காய்கறி வாங்கிவந்து

உலையை கொதிக்க வைத்து 

ஊறவைத்த உடுப்புகளை  அலம்பி காயவிட்டு

சமையல் அறைக்கு ஓடிவந்து சாதம் ஆக்கிவிட்டு

குழந்தைகளை அழைத்து வந்து

ஆவி பறக்க பறக்க சாப்பாடு கொடுத்து

கணவனுக்கு போன் போட்டு 

மதிய உணவுக்கு வர அழைப்பு விட்டு

வராவிட்டால் - தானும் சாப்பிடாமல் இருந்துவிட்டு

குழந்தைகளை தூங்க வைத்து

பக்கத்து வீட்டு பெண்களை அழைத்து ஊர்க்கதை பேசி சமாவைத்து

மாலையில் காப்பியும் கொடுத்து கடிக்கவும் ஏதாவது கொடுத்து

ஒவ்வொரு குழந்தைகளாய் முகம் - கால் - கை கழுவி
சாமி கும்பிடவிட்டு

 அ - ஆ சொல்லிக்கொடுத்து

மறுபடியும் சமையல் செய்து

கட்டிலுக்கு கொசுவலையும் போட்டு
 தலையனையும் போட்டு

எல்லோருக்கும் சாப்பாடும் கொடுத்து

சந்தோசமாய் கணவனையும் கட்டிப்பிடித்து தூங்குவதற்க்கா..?..?

"கல்யாணத்துக்கு முன் பெண் வீட்டாரிடம் இருந்து லட்சம் லட்சமாய் வரதட்சனை வாங்கப்படுகின்றது"

நெடுந்தீவு முகிலன்
பாலுறுப்புகள் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே
தெரியும் புகைப்படமே ஒட்டப்பட்டிருக்கிறது - 

எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில் படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில் பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன் யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும் முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை நானகவே எடுத்து நீட்டுகிறேன்.

நெடுந்தீவு – முகிலன்
உன் பாதணிகளின் ஸ்பரிசத்தால் என் தேடுதல் ஒரளவு நிறைவுக்கு வந்தது.

நீ உள்ளே இருப்பதை காட்டிகொடுத்தது ஒட்டி பிறந்த குழந்தைகளாய் நெருங்கிக்கிடந்த உன் காலணிகளே...

சங்கீத வகுப்போ வழிபாட்டுக்கான ஒன்று கூடலோ ஏதோ ஒன்று அந்த அறைக்குள் வணக்கத்துக்குரியதாய் ப்பேறிக்கொண்டிருக்கிறது.
உன் பாதங்கள் பட்டு பூமி பெறப்போகும் பாக்கியத்தை இந்த பாதணிகள் பங்கிட்டுக்கொண்டிருக்கிறது.

நீ வரும் வரை காத்திருக்க பழகிய செருப்புகள் என் தவிப்பை ஒரு போதும் உனக்கு எடுத்து கூறாது...

நீயும் நானும் இந்த காலணிகள் போலவும் இதுவரை நெருங்கியும் இருக்கவில்லை....

உன் ஞாபகமாய் உன் பாதணிகளை களவாடி கொள்வதற்கு மனசுக்கு பிடிக்கவில்லை...

இதை சாட்டாக வைத்து யாரேனும் அவசரமாய் புது காலணிகளை உனக்கு பரிசளிக்க கூடுமே...

நெடுந்தீவு முகிலன்
சந்தியின் தேனீர் கடையின் இருக்கையில் அண்ணாந்து கொண்டிருந்த ஆணி ஒன்று... என் அப்பா ஆசையாய் வாங்கித் தந்த காற்சட்டையின்
பின் பக்கத்தை பலவந்தமாகக் காயப்படுத்தியது.

கைகளால் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் - என் பின்னால்
வந்து கொண்டிருந்த பருவப் பெண்களின் கண்கள் என் பதட்டம் தெரியாமல் சிரித்துக் கொண்டன.

ஓட்டமும் நடையுமாய் வந்து ஆவேசத்தில் கழற்றினேன்

ஆயிரம் திட்டுகளுக்கு பின்புதான் அம்மா கையிலே எடுத்தாள்.

பிறந்த வீட்டில் இருந்து சீதனமாய் கொண்டுவந்து பத்திரமாய் பொத்தி வைத்திருந்த தையல் ஊசியும் பத்துப்போட்ட களைப்பில் செத்துப்போனது.

சித்திரம் போட்ட அந்த அழகோடு பலமுறை பட்டணமும் போய்ப்போய் வந்தேன்

வெயில் பொசுக்கி விடுமென காற்றில் உலரவிடுவேன்
.
பெரும்பாலும் திருநாட்களிலே பாவiனைக்கு உப்படுத்தினேன்

தேசிய உடை என்று... ஊரில் பட்டமும் வாங்கினேன்

பெரியவனான போதும் பாதுகாத்தேன்.

இப்போது என் மனைவி குப்பையில் தூக்கி வீசுகிறாள்

ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய் பொத்திவைத்திருக்கிறேன் 

எனது "அப்பாவின் பழைய ஞாபகத்தை" ...


நெடுந்தீவு முகிலன் -
துக்கமான சம்பவங்களோடும் துயரமான நிகழ்வுகளோடும்  என் இருப்பும் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.

கண்ணீருக்கு காரணமானவர்கள் காணாமல்போக  அறிமுகமில்லாதவர்களின்     ஆறுதல்கள் என் அழுகையை நிறுத்தியதும் உண்டு.

காலங்களும் அது தந்த காயங்களும்
ஞாபகத்தில் வருவதால் மனதிலே
வலியும் நோவும் குறைய வாய்ப்பில்லை...

வாழ்க்கையில் மறக்க முடியாதவர் என்று
எல்லோருக்கும் குறைந்த பட்சம் ஒருவராவது
நினைவிலிருப்பார்.

எனக்கும் ஒருவர் நிரந்தரமானவராக இருந்தார்
அவரின் பெயரையோ முகவரியையோ முகநூலினையோ  இங்கே அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை...

அவரின் தொடர்பை வலுப்படுத்திய நாளிலிருந்து  பலரது தொடர்பிலிருந்து நான் விடுபட்டேன்.

இதுவரை கிடைக்கவில்லை என்று ஏங்கியிருந்த அரவனைப்பும்
அலாதியான பிரியமும் அவரிடமிருந்து நிறையவே கிடைத்தது.

எனது ஏக்கங்களையும் வகைப்படுத்தி வைத்திருந்த  அந்தரங்க ஆசைகளையும் அவரிடமே மறைக்காமல்  மனம் விட்டு பேசவும் முடிந்தது.

தொட்டு பேசுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருந்த போதும்  வெட்கப்பட்டு தலைகுனிவதில் ரசனை இருந்தது.

தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் அவரது பார்வைகளிலும் வார்த்தைகளிலுமிருந்து கற்றும்கொண்டேன்.

கூட இருந்த உறவுகளை ஒதுக்கி அவர் மட்டுமே என்  எதிர்கால சொந்தம் என நானும் பலர் முன் காண்ப்பித்தேன்.

வாடகை வாங்காமல் என் இதயத்தில் குடியிருக்க அவருக்கு மட்டுமே இடமும் கொடுத்திருந்தேன்

கொஞ்ச நாளாய் அவர் புது வீடு மாறிவிட்டதாக  கேள்விப்பட்டேன் - நம்பமுடியவில்லை...

நெடுந்தீவு முகிலன்
எனது நிலா சூரியன் உடுக்கள் கோள்கள் மின்னலை கூட
எனது வானத்தில் இருந்து - யாரோ களவாடி விட்டார்கள்.

இருட்டுக்கு பழகிய என் வாழ்தலில்
கறுப்பு இரட்டிப்பாகிவிட்டது.

கறுப்பை சோகத்தின் பாசையாகவோ...
வேசத்தின் பசையாகவே - நான்
அப்பிக்கொள்ளவில்லை...

இருந்த வெளிச்சமும் அணைந்து
புகையே மேல் எழ இருண்ட தெருவில்
பயணம் போகின்றேன்.

வண்டல் வண்டலாய்என் வண்ணக் கனவுகள் இரண்டே விழிக்குள் பதுங்கியிருந்தன - இப்போது இறந்து கிடக்கின்றன.

எங்கோவாவது மின்மினி பூச்சியை பார்த்தால்
பின்னால் ஓடும் பழக்கமும் எனக்கு இல்லை...

விண்வெளியில் பெரும் கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்குகின்றனவாம். கறுப்பு இங்கே என்னை துப்பி விட்டிருக்கின்றது.

கறுப்பு என்பது ஒரு நிறம் அல்ல - அது எந்த நிறங்களின் இல்லாமையே...
அதனாலே எனது வாழ்க்கையும் ஒத்துப்போகிறது போல...

கறுப்பு எனது வானம் மட்டும் அல்ல - என் தேசமும்
கூடவே விடுதலையும் தான்.

நெடுந்தீவு முகிலன்

 உனக்காக காத்திருந்தேன்

மழை வந்தது.

குடையை வாங்கவும் - மழை நின்றது.

மழை நின்றதும்

நீ தூரவாய் தெரிந்தாய்.

உன்னை நோக்கியே ஓடினேன்

மழை திரும்பவும் பொழிந்தது...

விட்ட இடத்திலே குடையை எடுத்து மறுபடியும் உன் பின்னால் ஓடினேன்.

நீயோ யாரோ ஒருவனின் குடைக்குள் நனையாமல் நெருக்கமாய் நடந்து 
கொண்டிருந்தாய்.

உன் நிஐத்தை காட்டவே விட்டு விட்டு பெய்த மழைக்கு
என் மனப்பூர்வமான நன்றிகள்.

நெடுந்தீவு முகிலன்-
இப்போது என்னை ஒதுக்கி வைத்திருப்பவர்கள். 

ஏற்கனவே என்னோடு கூட இருந்தவர்கள்.

 இப்போது என்னோடு கூட இருப்பவர்கள்.

ஏற்கனவே என்னை ஒதுக்கி வைத்தவர்கள். 

எப்போது இவர்கள் என்னை ஒதுக்கி வைப்பார்களோ....

அவர்கள் என்னோடு கூட இருப்பதற்க்கு...

நெடுந்தீவு முகிலன்
இலக்கிய பெண்ணுக்கு எழுத்துகளால்
தாலி கட்டினேன்.

உணர்வுகளால் சேலை கட்டினேன்.

வார்த்தை குங்குமத்தை தொட்டு - பேனாவால்
பொட்டு வைத்தேன்.

சிந்தனை கட்டிலிலே நினைவுகளை
தாலாட்டி உறங்க வைத்தேன்.

வெள்ளை தாள் மெத்தையிலே - மொழிக்கு
முத்தம் கொடுத்தேன்.

மறை நிலை உத்திகளை உவமைகளால்
கட்டிப்பிடித்தேன்.

எதுகை மோனைகளால் அழகிய போர்வை விரித்தேன்.

ரகசிய வரிகளால் இரவை வரைந்தேன். அந்தரங்க சொற்களுக்கு அடிக்கோடிட்டேன்.

கருவறையில் கற்பனையை - மகவுவாய் சுமக்க விட்டடேன்.

பிரசவ காலத்தில் தந்தை தகுதி பெற்றேன். எல்லா குழந்தைகளையும் கவிதை என்றே கணக்கு வைத்தேன்.

வாசகர் முன்பள்ளிக்கு நாள் தோறும் அனுப்பி வைத்தேன் - ஆனால்
இப்போதும் என் மனைவி கர்பமாகவே இருக்கிறாள்.

நெடுந்தீவு முகிலன்
காணாமல் போன(அ)வள்…

எனது உயரம் இருப்பாள்.

கொலுசு கூச்சப்பட நடப்பாள்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.

கன்னத்தில் குழி விளச்சிரிப்பாள்.

பேர் ஊர் தெரியாது – ஆனால்
தமிழ் பேசுவாள்.

பஸ்சில் ஐன்னல் ஓரத்தில்தான்

உட்க்காந்து பயணிப்பாள்.

தாவணி அணிந்திருப்பாள் - அடிக்கடி துப்பட்டாவை சரிபார்ப்பாள்.

கீழ் உதட்டின் ஓரத்தில் ஒரு மச்சமும் இருக்கிறது.

உள்ளங்கையில் மருதாணி பூசி இருப்பாள்.

கைக்குட்டையை கசக்கி பிடித்திருப்பாள்.

மேலும் சொல்வதானால்…. கூந்தல் இரவைப் போலவும்
முகம் நிலவைப் போலவும் இருக்கும்.

கடைசியாய் மஞ்சல் தாவணியில்தான் காணாமல் போனாள்.

தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் கேட்கும் சன்மானம் வழங்கப்படும் - அது என் உயிர் என்றாலும் பரவாய் இல்லை…

நெடுந்தீவு முகிலன்

இரு விதமான மழை

மழை 01.

அடை மழை பெய்கிறது.

கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு
குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் .
மின்சாரம் தடைப்படுகிறது .

விறகுகள் நனைந்து விட மதிய உணவும்...
கனவாகி விடுகிறது.

நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து
நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன.

கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது.
சாக்கடை நீர் மணக்கிறது.

பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக
அடுப்படி பறணில் வைக்கப்படுகிறது.

கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு... காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன.

மரங்கள் முறிவதும்.... தவளைகள் கத்துவதும்....
கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது.

இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக...
எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள்.

மழை -02

அடைமழை பெய்கிறது

குளிரென்று கொஞ்சம் ஏசியை குறைத்துக் கொள்கிறார்கள்.

மின்சார அடுப்பில் அவசர அவசரமாக....சூடான கோப்பி தயாரிக்கப்படுகிறது.

குழந்தைகள் காகிதக் கப்பல்களை..
சரி செய்கிறார்கள்.

யன்னல்கள் சாத்தப்பட்டு தூவானத்திற்கு...
எதிராய் திரைச் சீலையும் மாட்டப்படுகிறது.

வாகனங்கள் உள்ளுக்கு எடுத்து விடப்படுகின்றன.
வானிலை அறிக்கைகள்...

ரீ.வியில் பார்க்கப்படுகிறது இனிய மழை நாளைப்பற்றி...
உறவுக் காரர்களோடு "ஸ்கைப்பில்" பேசப்படுகிறது

சாதுவாய்த் தூக்கம் வந்ததும் கம்பளியைப் போட்டுக்கொண்டு கதவுகளை அடித்துச்.. சாத்திக் கொள்கிறார்கள்.

வெளியேமுத்ததங்களினது சத்தம் மழையின் இரைச்சலைத் தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது -

நெடுந்தீவு முகிலன்
நான் வயிற்றில் இருக்கையில் ஆண்மகன் 
என்று அம்மா கனவு கண்டாளாம்.

பிரசவத்தின் பிற்பாடு அப்பாவின் வருமானத்தில் இருந்து பத்து விகிதம் வரதட்சணைக்காய் வங்கிக்குப் பறந்தது.

என் பூப்பெய்தல் காலத்தில் சேமிப்பில் இருந்த சில பகுதி தீட்டுக்குச் செலவானது.

பட்டப்படிப்பே என் கனவான போதிலும்ப ள்ளிக்கூடம் கூட பாதியிலே தலைமறைவாக்கப்ப ட்டது.

கொஞ்ச நாளாய் என் படுக்கை விரிப்பில் சிதறிகிடந்தன. வெளிநாட்டு மாப்பிளைகளின் “கோட்” அணிந்த புகைப்படங்கள்.

அவர்களை தெரிவு செய்வதற்குள்  பலர் தேர்வு எழுதிப்போனார்கள்.

“மணமகன்” தேவைக்கு பத்திரிகைகளில் விளம்பரம் எழுதியும் ஊனமுற்றவனேனும் உதவ முன்வரவில்லை…

காதலிக்க பின்னால் வந்தவனும் செவ்வாய் தோசத்தால்  திரும்பிப் போனான்.

கல்யாணமே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் - காரணம் சிலவேளை…. எனக்கும் பெண்குழந்தை பிறந்து விட்டால்….

நெடுந்தீவு முகிலன்
திபாவளிக்கு ஊருக்கு வருவதாக
சித்திர வருட பிறப்பின் போது வீட்டுக்கு
ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

என் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் 
என் வீட்டுக்காரர்களுக்கு...லீவு கிடைக்காததால் வரவில்லை
என்ற வருத்தத்தை இன்னமும் தெரிவிக்கவில்லை.....

மலிவு விற்பனையில் அம்மாவுக்காய் வாங்கி
வைத்த சேலையையும் குளிர் தாங்க முடியாமல்
போர்வையாக பயன்படுத்தி விட்டேன்.

தங்கச்சிக்கு பார்த்து வைத்த சிவப்பு கல்லு
தூக்கணமும் முற் பணம் கட்டாததால்
விலைப்பட்டு விட்டது.

பட்டாசு வெடிகளாவது வாங்கி தம்பிக்கு பார்சல்
அனுப்பவும் தற்போது கையில் சல்லி காசு இல்லை....

நண்பர்களுக்கு கொடுக்க சொல்லி.. நண்பர்
வாங்கி தந்த விஸ்கி போத்தலை...பயணம் நின்று
விட்ட கவலையில் நானே முழுங்கிவிட்டு...

பொங்கலுக்கு ஊருக்கு வருவதாக
வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதுதிக்கொண்டிருக்கிறேன்.

நெடுந்தீவு முகிலன்
எதையோ தொலைத்துவிட்டது போலவே
அழத் தொடங்கி விட்டது வானம்.

ஒரு வாரத்தை தாண்டியும்- அழுதுகொண்டிருக்கிறாயே

அப்படி என்னதான் உனக்கு சோகம்.

தோழர் தோழிகளை தொலைத்தாயா...அல்லது
பகைவனின் துப்பாக்கி முனையில்
நீதான் மாட்டி தவிக்கிறாயா...

எதற்காக அழுதுகொண்டே இருக்கிறாய்.

சகோதரர்கள் சுடப்பட்டார்களா...
சகோதரிகள் கற்ப்பழிக்கப்பட்டார்களா..எதை
நினைந்து நினைந்து அழுது கொண்டிருக்கிறாய்.

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கும் வரையும்...
காணாமல் போனவர்கள்வீடு வரும் வரையும்...
அழுது கொண்டிருக்கிறாயா...

உன் அழுகையின் அலாரம் தான் என்ன...

நாமும் இப்படித்தான் கொஞ்ச நாளாய்
உன்னை போல ...
அழுகையோடே இருந்தோம்.

"எங்கள் அழுகையையும் யாரும் கேட்டபாடில்லை"

நெடுந்தீவு முகிலன்

அம்மாவின் பிரேதத்திற்கு...
புதுத்துணிவாங்கவும்
சாவு வீட்டுக்கு பந்தல் போடவும்...
எட்டுச் செலவுக்கு படையல் செய்யவுமே..
.தூரதோசத்தில் வசிக்கும் என் சகோதரர்களின்
 காசோலை கைகள் நீண்டன.

அம்மா உயிரோடு இருக்கையில்
 கந்தல் துணிகளை சலவை செய்ததும்..
.குடிசை முகட்டுக்கு கிடுகு அடைத்ததும்...
பசியோடு தவிக்கையில் கஞ்சி கொடுத்ததும்....
என் வரண்ட கைகள் மட்டுமே...

நெடுந்தீவு முகிலன்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016


எல்லோரும் கனவு காண்கிறார்கள்

இந்த உலகில் சுவாச காற்றும் இதுவுமே இலவசம்

இழந்ததை திரும்ப மீட்பதும் இல்லாததை நினைத்து ஏங்குவதுமாய்
ஆளுக்கு ஆள் அது வேறுபடுகிறது.

தூக்கத்தின் பிறகு வருவதும் தூங்விடாமல் தடுப்பதுமாய்
இலக்குகளை பொறுத்து அது மாறுபடுகிறது

உடம்பிலிருக்கும் கடந்த கால காயத்தின் தழும்பு வலிக்காது - ஆனால்
கீறலின் தடையமே இல்லாத மனசு நோகும்.

மன்னிக்க முடியாதவையையும்  மறக்க முடியாதவைகளையும் சில வேளைகளில் கெட்ட கனவாக நினைத்து விடுகிறோம்.

வானத்தில் சிறகை விரிக்கும் பறவையையும் வனத்தில் வேட்டையாடும் விலங்கினையும் ஒன்றாக ஒப்பிட முடியாததாயினும் இரு தேடலும் ஒரு தேவைக்காகவே...

பசியோடிருப்பவனின் கனவு உணவு  அளவுக்கு மீறி சாப்பிட்டவனின் கனவு செமிபாடு.

மக்கள் விடுதலைக்கான கனவோடு தூங்குகிறார்கள்.
போராளிகள் எல்லையில் துப்பாக்கியோடு கண்விழிக்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்
இப்போது எங்கே போகிறது என் பயணம் என்று எனக்கே தெரியவில்லை...

கடந்து வந்த பாதையில் முள்ளு குத்திய  ரத்தமே காயவில்லை - தழும்பு எப்படி ஆறும்.

இதுவரை கால்களின் போக்கிலே போனது  போதும் என்றுதான் நினைக்கிறேன் - ஏனோ நடந்து பழகிவிட்ட பாதங்கள் நகரவே துடிக்கின்றன.

நிழலாவது துணைக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே  நடந்தேனன் - பாதையில் இருள் சூழ்ந்ததால்  என் விம்பமே என்னை விட்டு ஓடி விட்டது.

தனிமை எனக்கு எந்த தண்டனையையும் தரவில்லை என்றாலும் - வலி என்னை  கொஞ்சம் அநாவசியமாக அழவைத்தது உண்மைதான்..

எனக்கென்று நிரந்தரமாக இருந்த நின்மதியே பறிபோனது பறவாயில்லை.. அது அற்ப ஆசைக்கு விலைபோனது கவலைதான்.

பசிக்கும் போதெல்லாம் நினைவுகளை சாப்பிடுவதாகவும் கண்ணீரை பருகுவதாகவுமே நினைந்தேன். - ஆனால் சாப்பிட்டு முடிந்ததும் வெளியெ வீசும் எச்சில் இலையாக இதயத்தை ஒரு போதும் நினைக்கவில்லை..

பருந்தின் கால்களினிடையே நசுங்கி இரையான...  கோழி குஞ்சாய் பரிதவித்து கென்டிருக்கிறேன் - ஆனாலும் வல்லூறுகள் என்னை வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.

நெடுந்தீவு முகிலன்
நிரந்தரமான நிலையில் எதுவுமே இருக்க முடியாதா - அன்புக்கும்
ஆயுட் காலம் வைத்து பழகுகிறார்கள்.

நினைவுகள் ஞாபக மறதியாகிப் போகிறது - கனவு
பாதி தூக்கத்திலே கலைகிறது.

நம்பிக்கை துரோகமாகவும் - அரவனைப்பு அருவருப்பாகவும் காலம் கற்பிக்கிறது.

பருவ மாற்றத்தின் போதே - பலருக்கு
குணம் மாறுகிறது மனம் டுமாறுகிறது.

காயம் வைத்தவர்கள் காலம் போக்கில் - தழும்புகளை  பார்த்து நடிப்பு கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஆசைகளையே அனுபவிக்க துடிப்பவர்களின்  செவிகளுக்கு - விசுவாசத்தின் குரல் கேட்காது.

வீரியம் குறைந்த விரல்களை - இங்கே  வீணைகள் இசைக்க அனுமதிக்காது.

வேதனைகளை யாரும் விரும்பி ஏற்ப்பதில்லை - கூட  இருப்பவர்களே அதை இனாமாக கொடுத்து விட்டு...  தூர நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

வருந்தும் இதயங்களுக்கு புதிய கரங்கள்  மருந்திட நினைக்கிறது - பழைய துயரங்களே ஒதுங்கி விடுங்கள்.

நெடுந்தீவு முகிலன்.
தாழ்வு மனபான்மையோடு முடங்கி அடங்கி கிடப்பவர்களே
 தன்னம்பிக்கையை தொலைத்தவர்களாக இருக்கிறார்கள்.

தொலைத்த அந்த நம்பிக்கையை திரும்ப தேடி எடுக்காதவர்கள்
தோல்விகளுக்கே சொந்தமாகிவிடுகிறார்கள்.

அவமானத்தையே அங்கிகாரமாக எடுத்து கொண்டவர்கள்
வெற்றி பெற்றிருக்கிறார்கள்.-

விமர்சனத்தை ஏற்கவே பக்குவப்படாதவர்கள் 
ஆதங்கப்பட்டே அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையை ஏக்கமாகவே அனுபவிப்பவர்களால்  சிந்திக்கவோ முயற்சிக்கவோ முடியாது - இருக்கும் நிலையினையும் இழக்க நேரிடும்.

கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் கால்கள் முளைக்கும் என காத்திருப்பவர்களுக்கு - கண்ணீரை  தவிர எதுவுமே கடைசியில் மிச்சமிருக்காது.

தனித்துவமாக இருப்பவர்களே உயர்ந்திருக்கிறார்கள் என மனதளவில் நினைப்பவர்கள்தான்  முதலில் குறைபாடானவர்கள்.

எந்த நிலைக்கு போனாலும் அதற்கு அடுத்த நிலை  எல்லோருக்குமே காத்திருக்கிறது - ஆனால் மரணம் மட்டுமே யாவருக்கும் பொதுவாயிருக்கிறது.

நெடுந்தீவு முகிலன்