வியாழன், 25 ஆகஸ்ட், 2016

முட்கம்பி வேலியாலும் மண் மூட்டைகளாலும் சுற்றி
அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் குடிசை.
யாரும் நெருங்கி வராத படி மிதி வெடிகளும்
தாக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டன் காலத்து குடிசை அது - அந்த
குடிசைக்குள்தான் நாம் குட்டிகளாக ஈணப்பட்டோம்.
சாணி மொழுகிய திண்ணையின் வாசலில் அம்மா
போடும் மாக் கோலத்தின் அடையாளம் இருக்குமா..
.
தூசி படிந்தாவது அப்பாவின் புகைப்படம் - இப்பவும்
சுவரில் தொங்கிக் கொண்டிருக்குமா...
தேங்காய் எண்ணை தடவி வைத்த மண்வெட்டி
பிக்கான் கத்தி அரிவாள்களாவது அப்படியே இருக்குமா...
கறையான் அரித்து திண்டாலும் பறவாயில்லை
அடகு சீட்டுகளின் - திருமண சான்றிதளின்
பள்ளிக்கூட ஆவணங்களின் - பிறப்பு பத்திரங்களின்
ஏதேனும் அடித்துண்டுகளாவது மிஞ்சி இருக்குமா..
அக்காவுக்கு நிறுவனக்காரர்கள் தந்த தையல் மிசின்
நான் முதல் மாத சம்பளத்தில் வாங்கி வைத்த கண்ணாடி அலுமாரி
அறையின் மூலையில் கிடந்த நாற்காலி கோர்க்காலி கோழிக் கூடு
ஏதாவது எமக்காக இருக்குமா...?
"இன்னும் நாம் எங்கள் குடிசைக்கு செல்லவில்லை" - ஆனாலும்...
எங்கள் குடிசை முட்கம்பி வேலியாலும் ... மண் மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதாம்.
நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக