திங்கள், 28 ஜனவரி, 2013

போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். துரோகிகளால் கைது செய்யப்பட்டிருக்கலாம். எதிர்த்து போராடி யுத்தத்தின் களத்திலே - தேசத்துக்காய் உயிரை விட்டிருக்கலாம். ஒரு வேளை எங்கேயாவது உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம் இதுவரை அவள் பற்றியதாய் எதுவுமே இல்லை..... உறவுக்காரர்கள் என்னை தூரத்தில் பார்த்ததுமே ஓடோடி வந்து... இது உனது குழந்தையா...? மனைவியா..?...என்று ஒவ்வொருவரையும் கட்டித்தழுவி முத்தம் கொடுத்து உள்ளே அழைத்தார்கள். அப்போது எம்மோடு கூட வந்த ஆட்டோக்காரனுக்கும் ஒரு முத்தம் வழங்கப்பட்டது. - நெடுந்தீவு - முகிலன் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=103183