ஞாயிறு, 23 ஜூன், 2013


வருகிற.. புது வருடத்தை முன்னிட்டு நானும் மனைவியும் குழந்தைகளுமாக - ஒவ் ஒரு புடவைக்கடைகளாய் ஏறி இறங்கினோம்.

எத்தனை கடைகள் என்று - அன்னளவாக
இப்போது எனக்கு ஞாபகம் இல்லை.

மூத்தவள் - கலர் பிடிக்கவில்லை என்று...
முணுமுணுத்தாள்.

இளையவள் - இது மொடலிங் இல்லை என்று ...
மூஞ்சியை திருப்பி உம்முண்ணு இருந்தாள்.

அடுத்தது – அக்காட மாதிரியே எனக்கும் என்று...
அழுதழுது அடம்பிடித்தது.

கடைசி என் கையைபிடித்து அடிக்கடி இழுத்தது.
அடுத்த கடைக்கு போவோம் என்று...

எல்லோரையும் விட – மனைவி
அலுப்பு கொடுத்தாள்.
அது பிடிக்கிதா...?...இது பிடிக்கிதா..?..
என்று ...கேள்விகளை எழுப்பி...

ஏதோ எல்லோருக்கும் ஒவ்வொன்று
வாங்கிக்கொண்டு - வீடு திரும்புகையில்
இரவாகிவிட்டது.

"காலையில் யாரோ - ஒருவனின் அம்மா
வருகிறா... "

வயதாகிப்போன அம்மா தானோ என்று ....
நான் வாங்காமல் விட்டு வந்த – அந்த
வண்ண பட்டு புடவையைக் கட்டிக்கொண்டு.....

நெடுந்தீவு முகிலன்

பஸ்சில் போனாலும்
கப்பலில் போவது போலவே இருந்தது.

அலைகள் இருக்கவில்லை - ஆனால்
ஆட்டம் இருந்தது.

குண்றும் குழியுமான அந்த வீதிகளில்
மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு
ஒன்று சேர்ந்து குளக்கரையை...
நோக்கி சலசலக்கிறது.

லொறிகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே புரண்டு
கவிண்டு கிடந்தன.

இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த
விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து
புது வர்ணம் பூசப்பட்டிருந்தது.

இடையிடையே "நன்றி மீண்டும் வருக "
என்பது மட்டும் மகுட வாக்கியமாக...
பொறிக்கப்பட்டிருந்தது.

குலுக்கிற குலுக்கலில்
குடல் வெளியே வந்து..
விடும் போல் இருந்தது.


சாளரம் ஊடாக சிலர்
கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள்.

பலர் இருக்க முடியாமல்
துள்ளித்துள்ளி எழுந்து நின்றார்கள்.

"ஒன்று மட்டும் பரவாயில்லை" - வீதிகள்
குண்றும் குழியுமாக இருப்பதால்...

"ஓட்டுணருக்கு தூக்கம் வர வாய்ப்பில்லை"

நெடுந்தீவு - முகிலன்
-
கூரைகள் மேயப்படாவிட்டாலும்
பெயரளவில் - இதுவும்
பிரயாணிகளுக்கான
பேரூந்து நிலையம்.

மழைக்காலங்களில்
நனைந்து கொள்வதும்
வெயில் காலங்களில்
காய்ந்து கொள்வதும்
பயணிகளுக்கு பரீட்சயமாகிவிட்டது.

புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது என
கொட்டை எழுத்துகளில்
பொறிக்கப்பட்டிருக்கும்
பெயர்ப்பலகையில்
படிந்து கானப்படுகிறது.
புகையின் படலம்

ஆலடிப் பிள்ளையாருக்கு
கோபுரம் கட்ட
அரோகரா சொல்லிக்கொண்டு
அடியார் ஒருவர்
வீபூதி தட்டோடு
சில்லறை கேட்டபடி

வயிற்றுப் பசிக்காய்
கையை நீட்டி வரும்
ஏதோ ஒன்று
முடமான மனிதர்கள்.

சகிக்க முடியாத – அந்த
சல்லடைகளுக்குள்ளும்
சலனமில்லாமல்
தோளில் கைபோட்டு
பேசிக்கொண்டிருக்கும்
காதல் யோடிகள்

குன்றும் குழியுமான
அந்த சுற்றுப்புறத்தில்
தெரு நாய்களின்
திருமன வைபோகம்

அரைகுறையான ஆடைகளோடு
ஆங்கில கலாசார
அழகிகளின் நடமாட்டம்.
“தமிழ் பேசிக்கொண்டே”

மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலத்திலும்
திருத்தப்படவில்லையே என…..

நெடுந்தீவு – முகிலன்
போருக்கு பின் எனது கிராமத்துக்கு
ஒரு முறை செல்ல முடிந்தது.

உடைந்த சட்டி பாணைகளும்...
விளக்குமாறு தும்புத்தடிகளும்...
அகப்பை காம்புகளுமே - அம்மாவினது
அடையாளமாக மிஞ்சியிருந்தது.

அப்பாவின் இருப்பு
சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்...
பழைய முடிச்சு பொட்டாளியிலும்....
புலப்படுத்தப்பட்டது.

வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து
புதைந்து கிடக்கிறது.
எனது பழைய காற்ச்சட்டை
ஓரிரு நாட்களேனும்
தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம்.

உரலும் அம்மியும்
முற்றத்தில் சிதறிக்கிடந்தது.
ஊரார்கள் தூக்க முடியாமல்
விட்டு விட்டார்கள் போல...

தங்கச்சியினது - எந்த
அடையாளங்களும் அங்கே
காணப்படவில்லை...

எதிரிகளால் அவள்
கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
துரோகிகளால்
கைது செய்யப்பட்டிருக்கலாம்.

எதிர்த்து போராடி
யுத்தத்தின் களத்திலே - தேசத்துக்காய்
உயிரை விட்டிருக்கலாம்.

ஒரு வேளை எங்கேயாவது
உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதுவரை அவள் பற்றியதாய்
எதுவுமே இல்லை...

உறவுக்காரர்கள் என்னை
தூரத்தில் பார்த்ததுமே
ஓடோடி வந்து...

இது உனது
குழந்தையா...? மனைவியா..? என்று
ஒவ்வொருவரையும் கட்டித்தழுவி
முத்தம் கொடுத்து உள்ளே அழைத்தார்கள்.

அப்போது எம்மோடு
கூட வந்த ஆட்டோக்காரனுக்கும்
ஒரு முத்தம் வழங்கப்பட்டது.

நெடுந்தீவு - முகிலன்

காணாமல் போன(அ)வள்…

எனது உயரம் இருப்பாள்.
கொலுசு கூச்சப்பட நடப்பாள்.
யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.
கன்னத்தில் குழி விளச்சிரிப்பாள்.
பேர் ஊர் தெரியாது – ஆனால்
தமிழ் பேசுவாள்.
பஸ்சில் ஐன்னல் ஓரத்தில்தான்
உட்க்காந்து பயணிப்பாள்.
தாவணி அணிந்திருப்பாள் - அடிக்கடி
துப்பட்டாவை சரிபார்ப்பாள்.
கீழ் உதட்டின் ஓரத்தில்
ஒரு மச்சமும் இருக்கிறது.
உள்ளங்கையில் மருதாணி
பூசி இருப்பாள்.
கைக்குட்டையை கசக்கி
பிடித்திருப்பாள்.
மேலும் சொல்வதானால்….
கூந்தல் இரவைப் போலவும்
முகம் நிலவைப் போலவும் இருக்கும்.
கடைசியாய் மஞ்சல் தாவணியில்தான்
காணாமல் போனாள்.
தகவல் தெரிந்தவர்கள்
தொடர்பு கொள்ளவும்
கேட்கும் சன்மானம் வழங்கப்படும் - அது
என் உயிர் என்றாலும்
பரவாய் இல்லை…

நெடுந்தீவு முகிலன்

கந்தையா மாமாவின்
தேனீர் கடையின் இருக்கையில்
அண்ணாந்து கொண்டிருந்த ஆணி ஒன்று...

என் அப்பா ஆசையாய் வாங்கித் தந்த
காற்சட்டையின் பின் பக்கத்தை
பலவந்தமாகக் காயப்படுத்தியது.

கைகளால் கட்டுப் போட்டுக்கொண்டு
வீட்டுக்கு வரும் வழியில்
என் பின்னால் வந்து கொண்டிருந்த
பருவப் பெண்களின் கண்கள்
என் பதட்டம் தெரியாமல் சிரித்துக் கொண்டன.

ஓட்டமும் நடையுமாய் வந்து
ஆவேசத்தில் கழற்றினேன்

ஆயிரம் திட்டுகளுக்கு பின்புதான்
அம்மா கையிலே எடுத்தாள்.

பிறந்த வீட்டில் இருந்து சீதனமாய்
கொண்டுவந்து பத்திரமாய்
பொத்தி வைத்திருந்த
தையல் ஊசியும் பத்துப்போட்ட
களைப்பில் செத்துப்போனது.

சித்திரம் போட்ட அந்த அழகோடு
பலமுறை பட்டணமும் போய்ப்போய் வந்தேன்

வெயில் பொசுக்கி விடுமென
காற்றில் உலரவிடுவேன்.

பெரும்பாலும் திருநாட்களிலே
பாவiனைக்கு உப்படுத்தினேன்

தேசிய உடை என்று...
ஊரில் பட்டமும் வாங்கினேன்

பெரியவனான போதும் பாதுகாத்தேன்.

இப்போது என் மனைவி
குப்பையில் தூக்கி வீசுகிறாள்

ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய்
பொத்திவைத்திருக்கிறேன் எனது பழைய காற்சட்டையை ...

நெடுந்தீவு முகிலன்

அகப்பை காம்பால் மாவு கிளறி
அரிசிப் பேணியால் கொத்தி
ஓலைப்பெட்டியில் அவியும்
அம்மாவின் புட்டையும்
பழங்கறிச்சட்டியையும் நான்
பதம் பார்த்ததையும்...

அக்காளும் தங்கச்சியும்
மாத்துலைக்கை போட்டு
கை வலித்த போது – விரல்களுக்கு
நான் நல்லெண்ணை தடவியதையும்...

ஒல்லித்தேங்காய்களை இணைத்து
வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது
காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு
பார்வதி பார்த்து சிரித்ததையையும்...

புத்து இடித்து கறையான் கொண்டுவந்து
அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை
கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்...

வேப்பம் பூ வடகமும்
காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா
அப்பாவுக்கு பிடிக்கும்
ஆடி அமாவாசை விரதத்தையும் ...

ஓடியல் கூழும் ஒற்றைப்பனை கள்ளும்
முற்றத்து கொய்யாவின் கீழ்
சுற்றி இருந்து பருகியதையும்...

பாட்டிகளின் ஒப்பாரி ஊரில் இருந்தே
யமனை ஓடஓட கலைப்பதையும் ...

“இப்போதும் நினைக்க இனிக்கிறதே”

இதில் ஒன்றையேனும் என்
மகன் அனுபவிப்பானா…

“இப்போதே என் வீட்டுக்காரி வெளிநாடு போவோம் என்கிறாள்”

நெடுந்தீவு முகிலன்

ஒரே நாளில் - இரு மழை

மழை 01.
அடை மழை பெய்கிறது.
கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு
குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் .
மின்சாரம் தடைப்படுகிறது .
விறகுகள் நனைந்து விட மதிய உணவும்...
கனவாகி விடுகிறது.
நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து
நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன.
கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது.
சாக்கடை நீர் மணக்கிறது.
பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக
அடுப்படி பறணில் வைக்கப்படுகிறது.
கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு... காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன.
மரங்கள் முறிவதும்.... தவளைகள் கத்துவதும்....
கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது.
இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக...
எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள்.

மழை -02
அடைமழை பெய்கிறது
குளிரென்று கொஞ்சம் ஏசியை குறைத்துக் கொள்கிறார்கள்.
மின்சார அடுப்பில் அவசர அவசரமாக....
சூடான கோப்பி தயாரிக்கப்படுகிறது.
குழந்தைகள் காகிதக் கப்பல்களை..
சரி செய்கிறார்கள்.
யன்னல்கள் சாத்தப்பட்டு தூவானத்திற்கு...
எதிராய் திரைச் சீலையும் மாட்டப்படுகிறது.
வாகனங்கள் உள்ளுக்கு எடுத்து விடப்படுகின்றன.
வானிலை அறிக்கைகள்...
ரீ.வியில் பார்க்கப்படுகிறது
இனிய மழை நாளைப்பற்றி...
உறவுக் காரர்களோடு "ஸ்கைப்பில்" பேசப்படுகிறது
சாதுவாய்த் தூக்கம் வந்ததும் கம்பளியைப் போட்டுக்கொண்டு கதவுகளை அடித்துச்..
சாத்திக் கொள்கிறார்கள்.
வெளியேமுத்ததங்களினது சத்தம் மழையின் இரைச்சலைத் தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது -

நெடுந்தீவு முகிலன்

காலையில் தான் தங்கச்சிக்கு
கலியாணம் கேட்டு வந்தது.

மாப்பிள்ளை வெளிநாடாம்
சீதனம் கேட்க்கவில்லை
“நகை நட்டு போட்டால் போதுமாம்”

எப்படியாவது கட்டி கொடுத்திடலாம்
என்ற புழுகில் அப்பனும் ஆத்தாளும்...

ஓன்னுமே தெரியாத தங்கச்சி
விறாந்தையில் இருந்து
புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.
“சாதனைப் பெண்கள் பற்றி”

நெடுந்தீவு முகிலன்

இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு
பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.

நீ மழையில் நனைகிறாய் - அதுதான்
எல்லா குடைகளும் கம்பி எண்ணுகின்றன.

உன் விழியின் புருவத்தில்
ஐபுறோ பென்சில் பரீட்சை எழுதுகின்றது.

இரட்டை கூந்தலுக்குள் - ஒற்றை
பூவையாவது வைத்து வா பெண்னே
உன்னை வருட வரும் பட்டாம் பூச்சிகள்
கூட்டமாவது கொஞ்சம் குறையட்டும்.

உன்னோடு கை கோத்து நடக்கையில்
தெருவாவது கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா..?
உன் வீடேனும் எங்காவது ஊர்ந்திருக்கலாமே...

உன் கால்களை நனைத்து செல்கிறது
மழை நீர் - அதைத்தான்
தவளைகள் பருகிவிட்டு
போதையில் கத்துகின்றன.

உன்னை பார்த்த புழுகில் - கட்டிலில்
காலை மேலே உயர்த்தி
நான் தலை கீழாக நிற்க்கிறேன்
"வெளவால்கள் உன்னை - எப்போது
பார்த்து சென்றனவோ"

நெடுந்தீவு முகிலன்

மனம் நிறைய ஆசைகளோடு
ஊருக்கு போகின்றேன்.

பயறு சக்கரை வைத்து அவித்த
பல்லு கொழுக்கட்டையையோ...
குடிக்க மோரையோ மூக்குப்பேணியையோ...
றங்கு பெட்டிக்குள் கிடந்த
காணி உறுதியையோ...
பறண் அருகில் தொங்கிய
வெங்காய கூடையையோ...
துலா கிணற்றையோ இரட்டை மாடு
இழுக்கும் ஏர் கலப்பையையோ...
குறிஞ்சா கொடியையோ... அதை கொழுவி
இழுக்கும் கொக்கத்தடியையோ...
திண்ணையில் தண்ணி வைக்கும்
மண் பாணையையோ..
மண் பாணையை சுமக்கும் திருகணியையோ...
தோட்டத்து வாசல் மட்டை படலையையோ
பசளைக்கு போடும் ஆட்டுப் புழுக்கையையோ..

இதில் ஒன்னையுமே நான்
இப்போ பாக்கவில்லை - ஆனால்

வருசா வருசம் மட்டும்
மேள தாளங்களோடு கோயில்களில்
கொடியேற்றமும் கும்பாபிசேகமும் ஒப்போறிப்போகிறது..

நெடுந்தீவு முகிலன்
கதவு யன்னல் எல்லாம் அடித்து சாத்துகிறேன்
கட்டிலில் குப்பற படுத்து...
பேப்பரும் கூடவே பேனாவும் எடுக்கிறேன்.

உன்னை பார்க்கையில் நீ முறைத்தது
நான் பேசியும் நீ பேசாதது
எல்லாவற்றையும் சொற்களாக்கி
உனக்காக - உன்னை போலவே
அழகான காதல் கடிதத்தை
நிறைவு செய்கின்றேன்.

காகிதம் தலையனைக்கு கீழேயும்...
நான் தலையனைக்கு மேலேயும் ...
கண்களை மூடுகிறேன்- நீ
எனக்கு மேலேயும் வருகிறாய்.

காது மாட்டி கை வளையல் நகப்பூச்சு
எல்லாம் நீ கட்டி வந்த சேலையின்
நிறத்தோடு ஒத்திருந்தது.
நீயும் எனக்கு ஒத்தாசையாக இருந்தாய்

உன்னை நெருங்கவும் - நீ
என்னை நெருக்கவும்
இரவு சரியாகவே இருந்தது.

காலையில் காகிதத்திலே தான்
சில மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது
காரணம் - கனவின்
உன் வருகை பற்றியும்...
தொடுகை பற்றியும்...
காகிதத்தில் நான் கட்டாயம்
குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இன்றைய இரவிலாவது உனக்கான
ஓர் முழுமையான காதல் கடிதத்தை
வரைய முயற்சிக்கின்றேன்

தயவு செய்து எனது
கனவுப்பக்கம்
இன்று வராதே...

"காதல் புனிதமானது"

நெடுந்தீவு முகிலன்

தெருவுக்குப் போனால் திருவிழா போல
எனக்குப் பின்னால் பெரும் கூட்டமே வரும்.

அழகாய் இருக்கிறாய்… அம்சமாய் இருக்கிறாய் -என்று
கதை சொல்லுபவர்களுக்கும் குறைவில்லை…

சேலையில் போனால் - மறைந்திருந்து
எனது இடுப்பை விழிகளால்…
திண்றுகொண்டுமிருப்பார்கள்.

கால்க்கொலுசும்… நெக்கிளசும்… போட்டால்
எனக்கு தூக்கலாக இருக்கும் என்று சொன்னவர்களை… மாலையில்
மனைவிமாரோடு அவதானிக்கையில்
உள்ளுக்குள் சிரித்துமிருக்கிறேன்

கூந்தலை கொண்டை முடிக்க சொன்னவர்களையும்…முடித்த
கொண்டையில் பூக்கள் வைக்க முயற்சி செய்தவர்களையும்
நான் மறந்து விடவில்லை…

காலையில் வரும் பால்க்காரனே…. விசாரிப்பான்
இராத்திரி வேலை எப்படி என்று….

இரவில் என்னோடு ஒட்டி இருந்தவர்களும் - காலையில்
என்னைப்பற்றி ஊருக்குள் பிதற்றிக்கொள்வார்கள்.

வந்தவர்கள் நீங்கள் எல்லோரும்
எனது உள்ளாடை வரை களைந்து
சதைகளை விரல்களாலும் உண்டவர்கள் - ஆனால்
நகங்கள் தந்த காயத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

ஆண்மையில் வெளிவந்த பசலையை…
எனது இடையிலும்… எனது படுக்கை விரிப்பிலும் … தெழித்து விட்டு
முகம் சுழித்துப் போவீர்கள்.

வலியும் குருதியும் கசியும் எனது யோனியை…
அடுத்த இராத்திரிக்குள்
அவசரமாய் சுத்தப்படுத்தியாக வேண்டும்.

வரிசையில் எனது வாடிக்கையாளர்கள்
பணத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடிசையில் எனது குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருக்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்

விலைவாசிப் பத்தினி - எப்போது
கற்பழிக்கப்பட்டாளோ….
வறுமைக் குழந்தைகளுக்கு
தந்தை யார் என்றே தெரியவில்லை..

புரிந்துணர்வுச் சகோதரிக்கு
கொடுமையை சம்மந்தம் பேசி…
மனிதாபிமானம் - மாமா
வேலை பார்க்கிறது.

அநியாம் இரண்டாம் தாரமாய்
சமத்துவத்துக்கும் தாலிகட்டித்…
தம்பதியாகியது.

ஜனநாயக மாப்பிளை
சமுதாய மனைவிக்கு
விவகாரத்துக்கொடுத்துவிட்டு..
அதிகார மைந்தர்களின்
ஆணவப்புதல்விகளோடு…மட்டும்
கள்ளத்தொடர்பு
வைத்துக்கொள்கிறார்கள்.

அகதி யுவதிகளுக்கு
சீதனம்
சத்திரவதை ஆகிறது.

அனாதைத் தாய்மார்களிடம்
வேதனை களவில்
பால் குடிக்கிறது.

இனவாதப் பென்
சிறுபான்மை இளைஞர்களோடும்
உடல் உறவு வைத்துக் கொள்கிறாள்.
உரிமை வாரிசுகளுக்கு
சித்திக்கொடுமையும் செய்கிறாள்.

சட்ட மங்கை
மலடாகவே இருந்து கொண்டு..
சமரச ஆண்மையை
குறை சொல்லுகிறாள்.

அடிமைகளை குளோனிங்
முறையில் இனப்பெருக்கிவிட்டு..
விரல் சூப்ப விடுகிறாள்.

சமாதான குமரிக்கு
ஒப்பந்த திருமணத்தில்
திருப்தி இல்லையாம்.

அதிகார ஓரினச்சேர்க்கைக்கே
உடன்படுகிறாள்.

நெடுந்தீவு – முகிலன்.
பக்கத்து ஊருக்கு வேலைக்கு போன...
என் கணவர் நான்கு வாரம்
கழித்தே வீட்டுக்கு வருகிறார்.

வந்ததும் வராததுமாய்
குழந்தைகளை விசாரித்துக்கொண்டே...
வாங்கி வந்த பொருட்க்களை
எடுத்து நீட்டுவார்.

பெரும்பாலும் எனக்காக – ஒரு
சேலை இருக்கும். - அல்லது போனால்
“னைற்றியாவது “ இருக்கும்
திண்பண்டங்கள் ஏதாவது இருக்கும்.

குழந்தைகள் ஓவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று
கட்டாயம் இருந்தே ஆகும்.

அப்புறம் - அவசரமாய்
என்னை வந்து
நீண்ட தாகத்தோடு நெருங்குவார்.

நான் "மாதவிலக்கு"
பிரச்சனையைப் பற்றி பேசிக்கொள்ள
தானாகவே நழுவுவார்.

காலையில் வேலைக்கு போகிற…
ஆர்வத்தில் - அவசரத்தில்
முதல் பஸ் ஏறுவார்.

திரும்பவும் "நான்கு வாரம்"
கழித்தே வீட்டுக்கு வருவார்.

அப்பவும் - கணவரோடு
அதே பிரச்சனையை பற்றியே..
பேசவேண்டியிருக்கிறது.

நெடுந்தீவு – முகிலன்.
இந்த முறை குழந்தைகளுக்கு
நான் ஒன்றும் வாங்கி வரவில்லை..
அப்பா என அழைத்து ஆவலோடு
கை நீட்டும் குழந்தைகளுக்கு...
மனைவிக்காய் வாங்கி வந்த
மாங்காயைக் கொடுத்து சமாளிக்கிறேன்.

நெடுந்தீவு முகிலன்
குழந்தைகளை போல மண் அள்ளி தின்பதற்கும்
நம்மிடம் தானே சொந்த நிலங்கள் இல்லை...

நெடுந்தீவு முகிலன்

விழி வெண்படலம் ஊடாக ஒளிக்கதிராகி - நீ
விழித்திரைக்கு வருகின்றாய் வன்கோதுப்படை
நொருங்கி பார்வை நரம்பு ஈடாடுகின்றது.

உன் திமிரின் கணத்தாக்கங்களை மூளைக்கு
எடுத்து செல்கின்றேன் - செவிப்பறை
மென் சவ்வின் அதிர்வு அதிகரிக்கின்றது.

உன் அழகை அகத்துறிஞ்சுகிறேன்
ஆதலினாலோ – என் உடலில்
சமச்சீர் நிலை பேணப்படுகின்றது...

என் எலும்புகளின் குறுக்கு வெட்டு முகத்திலும்
உன் ஞாபகம் முழு வடிவமானது…

அசைவற்ற நீரில் எறியப்படும் கற்களாக - நீ
பார்க்கிறாய் என் உயிரின் துணிக்கைகள்
விரிவடைகின்றன - அமுக்கம் காரணமாக
இதயத்தில் மறு தாக்கமும் ஏற்ப்படுகின்றது.

நீ செல்லும் திசை நோக்கியே நான் அதிருவதால்…
நெட்டாங்கு அலைகளாகவும் உன் பின்னே ஊருகின்றேன்.

உனக்கும் எனக்குமான இடைப்பட்ட தூரத்துள்
காற்று நெருக்கப்படுகின்றது. காதல் ஐதாகின்றது.

அண்ட வெளியில் இருந்து பூமியினை வந்தடையும்
சூரியனின் உடுக்களின் வெப்பத்தை விடவும்
உன் பார்வையின் வீச்சம் செறிவானது.

மின் குமிழின் உட்ப்புற கண்ணாடியில்
பூசப்படும் புளொரொளிர்வுப் பதார்த்தமாக
எனக்குள் உன்னை பூசி நான் ஒளிர்கின்றேன்.

கடலுக்கடியிலான புவித்தகடுகள் அசைகையிலே…
பூமிஅதிர்சி ஏற்ப்படுகின்றது - தூரத்தில் நீ முறைத்து
போனாலும் எனக்கு அதிர்ச்சி ஏற்ப்படுகின்றது.

மைய நரம்பு தொகுதியின் தொழிற்ப்பாட்டில்
என் உடல் இப்போது செயற்ப்படுவதில்லை…

என் மூளையையும் முண்ணானையும் கூட - உன்
நினைவுகளே அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கினறன.

நீரில் கரையும் கறி உப்பாக உன்னில் கரைந்து
நான் காணாமல் போன போதும் - இரும்பு தூகள்ளை
உறிஞ்சும் காந்தமாய்... உன் கண்கள் என்
வெளிவடிவத்தையும் விட்டுவைப்பதில்லையே ...

நெடுந்தீவு முகிலன்

சாணம் தடவிய திண்ணையில் - நீ நடந்த
கால் அடையாளம் இருக்கிறது.

முந்தநாள் நீ போட்ட பூப் பாவடை கொடியில் காய்கிறது.

பசு மாடு கட்டியிருந்த பலா மரத்தின் கீழ் - நீ
கூந்தல் கட்டும் நீல நாடா கிடக்கிறது.

சந்திக் கிணற்றுக்கு நீ தண்ணீர் அள்ள கொண்டு வரும்
செப்பு குடம் கதிகால் அருகில் திருகணியில் இருக்கிறது

பின் கிணற்றில் செம்பரத்தம் இலை பிசைந்த சிரட்டையில் - உன்
ஓர் இரு கூந்தல் முடிகள் "நிலமும் ஈரம் காயவில்லை"
சற்று முன்னம் தான் நீ குளித்தும் இருக்கிறாய்.

பச்சை சுள்ளி விறகுகள் முற்றத்தில் காய்கிறது.
உலைப் பானையும் வெளி அடுப்பில் கொதிக்கிறது.

மலசல கூட கதவு திறந்து கிடக்கிறது
படலை சாத்திக் கிடக்கிறது.

"இந்த வெயிலில் நீ எங்கே போயிருப்பாய்"

ஒரு வேளை வயல் உழும் உன் அப்பனுக்கு காலை கஞ்சி
கொண்டு போயிருப்பாயோ -

நெடுந்தீவு முகிலன்
எனக்கும் ஒரு தாய் இருந்தாள்.

பாழ் அடைந்த வீட்டையும்...
கட்டி அவிழ்த்த கந்தல் துணிகளையும்...
தாய் நாட்டையும் எனக்காக விட்டிருந்தாள்.

தாய் நாட்டை தவிர எனக்கு
தந்தையோ சகோதரா்களோ
இருந்ததாக ஒரு போதும் சொல்லிவைக்கவில்லை...

எனது தாயின் விருப்பம் போவலே
என் தாயையும் தாய் நாட்டிலேயே புதைத்தேன்.

என் தாயை புதைத்த என் தாய் நாட்டிலே
என்னையும் புதையுங்கள்.

மண்ணுக்குள்ளேயாவது எமக்காக
ஓா் நிரந்தரமான தாய் நாடு இருக்கட்டும் .

நெடுந்தீவு முகிலன்
என் சகோதரியின் கணவன் ஒரு அன்னியனை
போலவே என்னை வரவேற்றான்.

நாற்க்காலியில் சாய்ந்து உட்க்காந்து எனக்காக - ஒரு
தேநீர் தயாரிக்க சகோதரியிடமே அறிக்கை விட்டான்.

எனது ஆடையின் பெறுமதியினை விசாரித்து கொண்டு - தனது
மேசை விரிப்பின் துண்டோடு சமப்படுத்தினான்.

சகோதரி என்னோடு உரையாடுவதற்கான எந்த
சந்தர்பத்தினையும் அவன் வழங்கவில்லை...

நான் புறப்படுவதற்கான கடைசி பேருந்தும் தயாராக
இருப்பதாக ஞாபகப்படுத்தினான்.

நான் எதை பற்றி பேசினாலும் அது அவனுக்கு
வன்மமாகவே இருந்தது.

போய் வருகிறேன் என்னும் போதே - மரியாதை
கொடுத்து என்னை அனுப்பி வைத்தான்.

கடைசி வரை எனது சகோதரியினை அன்று
நான் சந்திக்கவேயில்லை...

சகோதரியினை பார்க்க புறப்படுவதற்கு தயாராகி
கொண்டிருக்கும் என் தாய் தந்தையின் நிலை என்னவோ...

நெடுந்தீவு முகிலன்
பெரு விரலினை மறு விரல்களோடு சேர்த்து பொத்த தெரியும்
அத் துவாரத்தின் ஊடாக - ஒருவிழியினை மூடி மறு விழியினால் நடு வீதியில் நின்று படம் பிடிக்கின்றேன்.

மக்களை இடை மறித்து விசாரிக்கும்
துப்பாக்கி கொண்ட இராணுவ வீரன் தெரிகிறான்..

சன நெரிசலுக்குள்ளும் காதலியின் கன்னம் தடவி
கூந்தல் முடிகளை சரி செய்யும்...
ஒரு சின்ன காதலன் தென்படுகின்றான்.

வீதி விதிகளை மீறி உருண்டோடும்
கார்கள் மிதி வண்டிகள் தெரிகின்றன.

கால்களை பிடித்து கெஞ்சி "கை நீட்டும்"
குழந்தைகள் தெரிகின்றார்கள்.

கண் பார்வையிழந்தவனின் கைத்தடியினை
ஒருவன் பறித்துக் கொண்டு ஓடுகின்றான் - அதனை
மீட்க அவன் பின்னால் சிலர் ஓடகிறார்கள்.

வாகனங்களை இடைமறித்து - எதையோ வாங்கி
பொலீஸ் காரர்கள் சட்டை பைக்குள் சொருவுகிறார்கள்.

பாதையினை கடக்கையில் பேருந்தோடு மோதி
ஒரு முதியவன் உடனே இறந்து விடுகிறான்.

கை வலிக்க எனது படப்பிடிப்பினை...
பாதியிலே நிறுத்தினேன்.

இந்த உண்மைகளை எப்போதுதான் - உங்களுக்கு
நிஐமாக நான் படம் பிடித்து காட்டபோகிறேனோ...

நெடுந்தீவு முகிலன்.
எல்லோரினது உறக்கத்தின் பிறகே எலிகளின்
ஆட்சிக்கு உட்ப்படுத்தப்படுகிறது. எங்கள் வீடு.

கதவருகில் யன்னல் கம்பியில்
சாமிப்படத்திற்கு பின்னுக்கு சாப்பாட்டு மேசையில்
கட்டிலுக்கு கீழே ... என்று எல்லா பகுதிகளும்
எலிகளின் கூத்து மேடையாகி விட்டன.

பாட்டியின் மரண சாண்றிதழில் பாதிதான்
சாப்பிடப்பட்டிருந்ததாயினும் அடிப்பெட்டியில்
கிடந்த அக்காளின் கல்யாண சான்றிதள் காலியாகி இருந்தது...

தம்பி இரவில் கத்துவான் எலி எலி என...
அப்பாவோ தூக்கத்தில் பிதற்ருகிறான் என்று அயந்து விடுவார்.

எலிகளில் உடல் உறவுகளும் பிரசவமும்
எனது புத்தக அலுமாரிக்குள்ளே ஒப்பேறியிருக்கின்றன.

காலையில் வீடு முழுவதும் எலிகளில் மலம்
கறுப்பு நெல்லாய் விதைக்கப்பட்டிருக்கும்.

இரவில் தானே வேலைக்கு கிளம்புகின்றன - பகலில் இந்த எலிகள்
எங்குதான் பதுங்கியிருக்கின்றனவோ...

எலிகள் மனிதர்களை போல் இல்லையே..
பயமில்லாமல் பகலிலும் திருடிகொள்வதற்க்கு...

நெடுந்தீவு முகிலன்
பாலுறுப்புகள் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே
தெரியும் புகைப்படமே ஒட்டப்பட்டிருக்கிறது - எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில்
படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை
பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில்
பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன்
யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே
தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும்
முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை
நானகவே எடுத்து நீட்டுகிறேன்.

நெடுந்தீவு முகிலன்

முட்கம்பி வேலியாலும் மண் மூட்டைகளாலும் சுற்றி
அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் குடிசை.

யாரும் நெருங்கி வராத படி மிதி வெடிகளும் தாக்கப்பட்டிருக்கின்றன.

பாட்டன் காலத்த குடிசை அது - அந்த
குடிசைக்குள்தான் நாம் குட்டிகளாக ஈணப்பட்டோம்.

சாணி மொழுகிய திண்ணையின் வாசலில் அம்மா போடும் மாக் கோலத்தின் அடையாளம் இருக்குமா...

தூசி படிந்தாவது அப்பாவின் புகைப்படம் - இப்பவும்
சுவரில் தொங்கிக் கொண்டிருக்குமா...

தேங்காய் எண்ணை தடவி வைத்த மண்வெட்டி
பிக்கான் கத்தி அரிவாள்களாவது அப்படியே இருக்குமா...

கறையான் அரித்து திண்டாலும் பறவாயில்லை
அடகு சீட்டுகளின் - திருமண சான்றிதளின்
பள்ளிக்கூட ஆவணங்களின் - பிறப்பு பத்திரங்களின் ஏதேனும்
அடித்துண்டுகளாவது மிஞ்சி இருக்குமா..

அக்காவுக்கு நிறுவனக்காரர்கள் தந்த தையல் மிசின் - நான்
முதல் மாத சம்பளத்தில் வாங்கி வைத்த கண்ணாடி அலுமாரி
அறையின் மூலையில் கிடந்த நாற்காலி கோழிக் கூடு ஏதாவது
எமக்காக இருக்குமா...

"இன்னும் நாம் எங்கள் குடிசைக்கு செல்லவில்லை" - ஆனாலும்

எங்கள் குடிசை முட்கம்பி வேலியாலும் ...
மண் மூட்டைகளாலும்...
சுற்றி அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதாம்.

நெடுந்தீவு முகிலன்

நீ இப்போது எங்கே இருக்கிறாய் . தொலைபேசி அலறுகிறது
ஒரு தடைவையாவது தூக்கமாட்டாயா..?

தொலை பேசியை வீட்டிலே விட்டுவிட்டு - நீ வெளியே சென்று விட்டாயோ..?

வெளியே செல்வதாயின் - நீ யாருடன் சென்றிருப்பாய்.

ஒரு வேளை தொலைபேசியை கையிலே …வைத்துக்கொண்டு
யாரோடாவது உரையாடிக்கொண்டிருக்கிறாயோ..?

உனது உரையாடலிலாவது நான் ஞாபகப்படுவேனா…?..

நீ ஏன் எனக்கு ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

என்னை எங்கோ எறிந்து விட்டு…நீ காணமல் போனாய்.

காற்றில் உனது வாசனைகளை அனுபவிக்கிறேன்.
கனாக்களில் உனது வருகையை அவதானிக்கிறேன்.

இப்போதைய உனது தோற்றம் எப்படி இருக்குமோ…
மாற்றம் நிகழ - நான் காரணம் ஆனேனோ….?

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும் ...
துண்டித்தாவது விடுவாயா...?

உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு...

நெடுந்தீவு முகிலன்
எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா...
என்னோடு நான் அழுகின்றேனா...
இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது.

சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும்
உரிமையோடு அழுகின்றேன்.
கதவு தட்டப்படும் போதெல்லாம்
கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன்.

என் அழுகைக்கான காரணத்தை
அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை...

இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான்
எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ
எனக்கே தெரியாது.

அழுகையின் தொடக்கமும் முடிவும்
அழுகையாகவே மட்டும் இருக்கிறது.

கிடைக்கும் தனிமைகளை எல்லாம்
அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன்.

அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின்
மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன்.

அழாத நாட்கள் என்று ஒன்றமே
என்னை கடந்ததாக இல்லை...

அழுகையை விட ஒரு நண்பன்
இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை...

அழுவதற்கென்று குளியல் அறையினையே
நான் அதிகம் பயன்படுத்துகின்றேன்.
யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும்
எனக்கு பயமில்லை...

எனது அழுகையினை எனது குளியல்
ஒருபோதும் காட்டியே கொடுத்ததில்லை..

நெடுந்தீவு முகிலன்

மழை பெய்துகொண்டிருந்தது.

சேரிப் புறத்திலே கூரை சரிந்த
பாழ் அடைந்த வீட்டில் வசிக்கும்
உன்னை பார்க்க வருகின்றேன்.
"ஒற்றை குடையோடு"

என்னை தூரத்தில் பார்த்ததும்
ஓடி வருகிறாய்.

மெதுவாய் உன்னை கதுவி என்னில்
சாய்த்துக் கொண்டு - உனது
உறவுக்காரர்களை விசாரித்தேன்.

நீ பேசவே இல்லை மௌனத்திலும்
முனகலோடு என்னை இறுக பிடிக்கிறாய் .
"மழையை ரசித்தபடி"

உன் மேனி குளிரில் நடுங்க
என் நடை தள்ளாடியது.
குடை ஈடாடியது - இருந்தும்
உனது உறவுக்காரர்களை பற்றியே
விசாரித்தேன்.

குடை வழியாக ஒழுகும் மழை நீருடன்
கை நீட்டி விளையாடுகிறாய்.
எந்த சலனமும்மில்லாமலே...

பேசாமலே நானும் நடந்தேன்

எனது மாளிகை நெருங்க - திரும்பவும்
உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.

"திடுக்கிட்டு அம்மா என அலறினாய்"

மழை முற்றாகவே நின்ற பிறகும்
குடைக்குள் தூறியது... அது
அந்த ஆறு வயது சிறுமியின்
விழிகளில் இருந்து....

நெடுந்தீவு முகிலன்

எனக்கும் ஒரு தாய் இருந்தாள். பாழ் அடைந்த வீட்டையும்... கட்டி அவிழ்த்த கந்தல் துணிகளையும்... தாய் நாட்டையும் எனக்காக விட்டிருந்தாள். தாய் நாட்டை தவிர எனக்கு தந்தையோ சகோதரா்களோ இருந்ததாக ஒரு போதும் சொல்லிவைக்கவில்லை... எனது தாயின் விருப்பம் போவலே என் தாயையும் தாய் நாட்டிலேயே புதைத்தேன். என் தாயை புதைத்த என் தாய் நாட்டிலே என்னையும் புதையுங்கள். மண்ணுக்குள்ளேயாவது எமக்காக ஓா் நிரந்தரமான தாய் நாடு இருக்கட்டும் . நெடுந்தீவு முகிலன்