ஞாயிறு, 23 ஜூன், 2013


சாணம் தடவிய திண்ணையில் - நீ நடந்த
கால் அடையாளம் இருக்கிறது.

முந்தநாள் நீ போட்ட பூப் பாவடை கொடியில் காய்கிறது.

பசு மாடு கட்டியிருந்த பலா மரத்தின் கீழ் - நீ
கூந்தல் கட்டும் நீல நாடா கிடக்கிறது.

சந்திக் கிணற்றுக்கு நீ தண்ணீர் அள்ள கொண்டு வரும்
செப்பு குடம் கதிகால் அருகில் திருகணியில் இருக்கிறது

பின் கிணற்றில் செம்பரத்தம் இலை பிசைந்த சிரட்டையில் - உன்
ஓர் இரு கூந்தல் முடிகள் "நிலமும் ஈரம் காயவில்லை"
சற்று முன்னம் தான் நீ குளித்தும் இருக்கிறாய்.

பச்சை சுள்ளி விறகுகள் முற்றத்தில் காய்கிறது.
உலைப் பானையும் வெளி அடுப்பில் கொதிக்கிறது.

மலசல கூட கதவு திறந்து கிடக்கிறது
படலை சாத்திக் கிடக்கிறது.

"இந்த வெயிலில் நீ எங்கே போயிருப்பாய்"

ஒரு வேளை வயல் உழும் உன் அப்பனுக்கு காலை கஞ்சி
கொண்டு போயிருப்பாயோ -

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக