ஞாயிறு, 23 ஜூன், 2013


விழி வெண்படலம் ஊடாக ஒளிக்கதிராகி - நீ
விழித்திரைக்கு வருகின்றாய் வன்கோதுப்படை
நொருங்கி பார்வை நரம்பு ஈடாடுகின்றது.

உன் திமிரின் கணத்தாக்கங்களை மூளைக்கு
எடுத்து செல்கின்றேன் - செவிப்பறை
மென் சவ்வின் அதிர்வு அதிகரிக்கின்றது.

உன் அழகை அகத்துறிஞ்சுகிறேன்
ஆதலினாலோ – என் உடலில்
சமச்சீர் நிலை பேணப்படுகின்றது...

என் எலும்புகளின் குறுக்கு வெட்டு முகத்திலும்
உன் ஞாபகம் முழு வடிவமானது…

அசைவற்ற நீரில் எறியப்படும் கற்களாக - நீ
பார்க்கிறாய் என் உயிரின் துணிக்கைகள்
விரிவடைகின்றன - அமுக்கம் காரணமாக
இதயத்தில் மறு தாக்கமும் ஏற்ப்படுகின்றது.

நீ செல்லும் திசை நோக்கியே நான் அதிருவதால்…
நெட்டாங்கு அலைகளாகவும் உன் பின்னே ஊருகின்றேன்.

உனக்கும் எனக்குமான இடைப்பட்ட தூரத்துள்
காற்று நெருக்கப்படுகின்றது. காதல் ஐதாகின்றது.

அண்ட வெளியில் இருந்து பூமியினை வந்தடையும்
சூரியனின் உடுக்களின் வெப்பத்தை விடவும்
உன் பார்வையின் வீச்சம் செறிவானது.

மின் குமிழின் உட்ப்புற கண்ணாடியில்
பூசப்படும் புளொரொளிர்வுப் பதார்த்தமாக
எனக்குள் உன்னை பூசி நான் ஒளிர்கின்றேன்.

கடலுக்கடியிலான புவித்தகடுகள் அசைகையிலே…
பூமிஅதிர்சி ஏற்ப்படுகின்றது - தூரத்தில் நீ முறைத்து
போனாலும் எனக்கு அதிர்ச்சி ஏற்ப்படுகின்றது.

மைய நரம்பு தொகுதியின் தொழிற்ப்பாட்டில்
என் உடல் இப்போது செயற்ப்படுவதில்லை…

என் மூளையையும் முண்ணானையும் கூட - உன்
நினைவுகளே அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கினறன.

நீரில் கரையும் கறி உப்பாக உன்னில் கரைந்து
நான் காணாமல் போன போதும் - இரும்பு தூகள்ளை
உறிஞ்சும் காந்தமாய்... உன் கண்கள் என்
வெளிவடிவத்தையும் விட்டுவைப்பதில்லையே ...

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக