ஞாயிறு, 23 ஜூன், 2013

பெரு விரலினை மறு விரல்களோடு சேர்த்து பொத்த தெரியும்
அத் துவாரத்தின் ஊடாக - ஒருவிழியினை மூடி மறு விழியினால் நடு வீதியில் நின்று படம் பிடிக்கின்றேன்.

மக்களை இடை மறித்து விசாரிக்கும்
துப்பாக்கி கொண்ட இராணுவ வீரன் தெரிகிறான்..

சன நெரிசலுக்குள்ளும் காதலியின் கன்னம் தடவி
கூந்தல் முடிகளை சரி செய்யும்...
ஒரு சின்ன காதலன் தென்படுகின்றான்.

வீதி விதிகளை மீறி உருண்டோடும்
கார்கள் மிதி வண்டிகள் தெரிகின்றன.

கால்களை பிடித்து கெஞ்சி "கை நீட்டும்"
குழந்தைகள் தெரிகின்றார்கள்.

கண் பார்வையிழந்தவனின் கைத்தடியினை
ஒருவன் பறித்துக் கொண்டு ஓடுகின்றான் - அதனை
மீட்க அவன் பின்னால் சிலர் ஓடகிறார்கள்.

வாகனங்களை இடைமறித்து - எதையோ வாங்கி
பொலீஸ் காரர்கள் சட்டை பைக்குள் சொருவுகிறார்கள்.

பாதையினை கடக்கையில் பேருந்தோடு மோதி
ஒரு முதியவன் உடனே இறந்து விடுகிறான்.

கை வலிக்க எனது படப்பிடிப்பினை...
பாதியிலே நிறுத்தினேன்.

இந்த உண்மைகளை எப்போதுதான் - உங்களுக்கு
நிஐமாக நான் படம் பிடித்து காட்டபோகிறேனோ...

நெடுந்தீவு முகிலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக