ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

எனக்கொரு தனிமை அவசரமாக தேவைப்படுகிறது.

கூட இருப்பவர்களிடம் என்னால் அதை சொல்லி
புரியவைக்க முடியவில்லை...

என் நிலை அறிந்து அவர்கள் ஒதுங்குவதாயுமில்லை...

தலை மறைவாக வாழ்வதற்கான அனுபவும் தைரியமும்
எனக்கு கிடையாது - முயற்சித்தாலும்
யாரினாவது அரவனைப்புக்குள்ளாக நேரிடும்.

சொல்லாமலே தூரவாக தொலைந்து போனாலும்
பரிதாபப்பட்டு என்னை தேடி பிடிக்க கூடும்.

நான் நானாக இருந்து நாளாகிவிட்டது.
இப்போது என்னை நானே மற்றவர்களிடத்தில்
இருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருக்கிறேன்.

உறக்கத்தின் போதிலும் எனக்கு விடிவு கிடைப்பதாயில்லை
அனுமதியின்றி கனவிலும் பலர் நடமாடுகிறார்கள்.

என்னை சொந்தம் கொண்டாடுபவர்களிடம்
என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என
எப்படித்தான் சொல்லுவது.

என்னிடம் உதவி பெற்றவர்களும் தொடர்பிலிருப்பதையே
நன்றி கடனாக கருதி என் நின்மதியை குலைக்கிறார்கள்..

மரியாதை கொடுத்தவர்களை ஞாபகத்தில் வைக்கவோ
அவமானப்படுத்தியவர்களை பழி வாங்கவோ எனக்கு நேரமில்லை...

காட்டி கொடுத்தவர்கள் என் கண்முன்னே
காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்
துரோகிகளால் எனக்கு எற்பட்ட பயமும் போய் விட்டது.

எதிரிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும்
பலமில்லாதவர்களாய் இருப்பதால் நான் தப்பிவிட்டேன்.

போட்டி போடுவதற்குதான் ஆள் இல்லை ஆனால்
பொறாமை படுபவர்கள் கூட்டம் ஓயவில்லை...

சகிப்புக்குள்ளான வாழ்க்கையில் அடிமைப்பட்டு
ஆசையை அனுபவிக்க எனக்கு தேவை இல்லை..

என்னிடமிருந்து அன்பை அள்ளி எடுத்தவர்களும்
என் கண்கள் நனைய காரணமாகிவிட்டார்கள்.

மரணத்தினாலே ஒரு நிரந்தர தனிமையும் விடிவும் கிடைக்கும்
என முற்றும் நம்பியே... தற்கொலைக்கு தயாராகிறேன்.

கடவுளே திரும்பவும் என்னை ஒரு மனித பிறவிக்கு மாற்றி
துயர பாதையில் பயணிக்க விடாதே..

நெடுந்தீவு முகிலன்
இலக்கிய பெண்ணுக்கு எழுத்துகளால்
தாலி கட்டினேன்.
உணர்வுகளால் சேலை கட்டினேன்.
வார்த்தை குங்குமத்தை தொட்டு - பேனாவால்
பொட்டு வைத்தேன்.
சிந்தனை கட்டிலிலே நினைவுகளை
தாலாட்டி உறங்க வைத்தேன்.
வெள்ளை தாள் மெத்தையிலே - மொழிக்கு
முத்தம் கொடுத்தேன்.
மறை நிலை உத்திகளை உவமைகளால்
கட்டிப்பிடித்தேன்.
எதுகை மோனைகளால் அழகிய
போர்வை விரித்தேன்.
ரகசிய வரிகளால் இரவை வரைந்தேன்.
அந்தரங்க சொற்களுக்கு அடிக்கோடிட்டேன்.
கருவறையில் கற்பனையை - மகவுவாய்
சுமக்க விட்டடேன்.
பிரசவ காலத்தில் தந்தை தகுதி பெற்றேன்.
எல்லா குழந்தைகளையும் கவிதை என்றே
கணக்கு வைத்தேன்.
வாசகர் முன்பள்ளிக்கு நாள் தோறும்
அனுப்பி வைத்தேன் - ஆனால்
இப்போதும் என் மனைவி
கர்பமாகவே இருக்கிறாள்.
நெடுந்தீவு முகிலன்
இராவணனுக்கு
பத்து முகங்கள் - ஆனால்
இராமர்களாக தங்களை
காட்டிக்கொண்டலைபவர்களுக்கு...
வெளியே தெரியாமல்
நூறு முகங்கள்.

நெடுந்தீவு முகிலன்