ஞாயிறு, 23 ஜூன், 2013


ஒரே நாளில் - இரு மழை

மழை 01.
அடை மழை பெய்கிறது.
கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு
குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் .
மின்சாரம் தடைப்படுகிறது .
விறகுகள் நனைந்து விட மதிய உணவும்...
கனவாகி விடுகிறது.
நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து
நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன.
கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது.
சாக்கடை நீர் மணக்கிறது.
பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக
அடுப்படி பறணில் வைக்கப்படுகிறது.
கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு... காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன.
மரங்கள் முறிவதும்.... தவளைகள் கத்துவதும்....
கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது.
இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக...
எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள்.

மழை -02
அடைமழை பெய்கிறது
குளிரென்று கொஞ்சம் ஏசியை குறைத்துக் கொள்கிறார்கள்.
மின்சார அடுப்பில் அவசர அவசரமாக....
சூடான கோப்பி தயாரிக்கப்படுகிறது.
குழந்தைகள் காகிதக் கப்பல்களை..
சரி செய்கிறார்கள்.
யன்னல்கள் சாத்தப்பட்டு தூவானத்திற்கு...
எதிராய் திரைச் சீலையும் மாட்டப்படுகிறது.
வாகனங்கள் உள்ளுக்கு எடுத்து விடப்படுகின்றன.
வானிலை அறிக்கைகள்...
ரீ.வியில் பார்க்கப்படுகிறது
இனிய மழை நாளைப்பற்றி...
உறவுக் காரர்களோடு "ஸ்கைப்பில்" பேசப்படுகிறது
சாதுவாய்த் தூக்கம் வந்ததும் கம்பளியைப் போட்டுக்கொண்டு கதவுகளை அடித்துச்..
சாத்திக் கொள்கிறார்கள்.
வெளியேமுத்ததங்களினது சத்தம் மழையின் இரைச்சலைத் தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது -

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக