வியாழன், 15 ஜூன், 2017

கணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை


திருமணத்துக்கு முன்னும் பின்னும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்கள் வாழும் சமுதாயத்தின் மரபும் சூழலுமாகும். இவ் இரு காரணங்களால்தான் விதவை நிலையும் பரத்தமையும் நாட்டின் பிரச்சனைகளுள் தீர்க்க வியலாதனவாக நிலவுகின்றன. கணவனை இழந்த பெண்ணுக்கு சமுதாயம் வலியுறுத்தும் வேறு பட்ட வாழ்வே வாழ்கை நெறியாக அமைந்து விடுகிறது. இவள் மங்கலமான வாழ்வை மட்டுமே இழக்கிறாள். ஆனால் கடந்த கால இனிமையான வாழ்வை இழக்காது தவிக்கிறாள். உரிமை வேட்கையுடைய சமுதாயத்தில் மெல்ல மெல்லவாவது விதவையின் வாழ்வும் மலரத் தொடங்க வேண்டும்.
ஒருத்திக்கு ஒருத்தன் என்னும் உயரிய குறிக்கோளை இளமை காலங்களில் பெண்களின் மனதில் பதியுமாறு முன்னோர் கற்ப்பித்தனர்.. கணவன் இறந்தால் தூய வெண்ணிற ஆடையினை அணிதலும் பூ பொட்டு அணிகலன்களை அணியாது தவிர்த்தலும் தலை முடியினை மழித்துவிடுதலும் உணவு முறையில் மாறுதல் ஏற்ப்படுத்தி கொள்ளதலும் அன்றைய சமுதாயத்தில் விதவைக்கு வழக்கமாக இருந்தது.
விதவை வாழ்வுக்குரிய காரணம் விதியின் பெயராலும் மரவு வழி வந்த சடங்குகளாலும் நிலவும் கொடுமை எனப்படுகின்றது. இவர்களின் வாழ்க்கை துயரம் நிறைந்துள்ளது "விதியை ஏற்றி வந்த பல்லவனும் சம்பிரதாயங்களை ஏற்றி வந்த குதிரை வண்டியும் முட்டி மோதி கொண்டதில் தாலிப்பாலம் தகர்ந்து விட்டது வாழ்க்கைச் சந்தையில் பூ வாங்க போய் நார் கூட வாங்க முடியாமல் துயர ஊர் திரும்பிய துர்ப்பாக்கிய சாலிகள்" என்றாகி விட்டது இவர்களின் வாழ்கை விதியின் மேல் கொண்ட சம்பிரதாய மரபு போன்றவையால்தான் விதவையர் வாழ்வில் துயரம் மேலோங்கியுள்ளது. என்று கூறலாம்.
இவர்கள் வாழ்வில் எத்தகைய துயர நிலை நிலவுகிறது என்பதினை புதுக் கவிஞர்கள் பலரும் பாடியுள்ளார்கள். அன்றைக்கு பிருந்தாவனத்தில் ஆயிரக்கணக்கான கோபியர்கள் கண்ணணோடு மகிழ்சியாக இருந்த அந்த நிலை முற்றிலும் மாறி ஏழை விதவையர் அடுத்த வேளை உணவை எண்ணி ஆதரவற்றவர்களாக அனாதைகளாக ஆசிரமங்களில் சரண்புகுகின்றனர். பக்தியை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக பயனை செய்கிறார்கள் என்கிறார். இரா.கதைப்பித்தன் வெள்ளாடை தரித்து மனதில் உள்ள ஆசைகளையும் விரட்டிய இவ்விதவை நட்சத்திரங்களுக்கு இரவு இல்லால் போய்விட்டது. இவர்கள் வாழ்வில் வசந்தத்தை இனி எதிர்நோக்க முடியாத பட்ட மரங்கள். கூவ முடியாத குயில்கள் மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கம் கோபம் என்பதனை வெளிப்படுத்த தெரியாதவர்கள். தங்கள் ஆடையின் மூலமாகவே விதவைகள் என்பதனை சொல்லாமல் சொல்லி கொள்வார்கள். இவர்கள் வாழ்வின் வெறுமையிலேயே முடிப்பார்கள். கணவன் வாழ்ந்த காலத்தைப் போலவே மடிந்த பிறகும். அவன் நினைவாகவே வாழ வேன்டும் என்பது மரபான கருத்து.
கடந்த காலத்தில் மஞ்சளில் குளித்து மஞ்சத்தில் மகிழ்ந்து போன்ற பல்வேறு இன்ப நிகழ்சிகள் இப்போது முடிந்து விட்டது. இவர்கள் சமுதாயமெனும் வீணையில் அறுந்துபட்ட நரம்புகள். மங்கலகரமான பொட்டடினை இழந்தவர்கள். உயிரெழுத்து போன்ற தலைவனை இழந்து விட்ட மெய் எழுத்து போன்றவர்கள். புகை வண்டிக்கு பொறி (இங்சின்) எவ்வாறு இன்றியமையாததோ அதுபோல ஒரு பெண்ணின் வாழ்க்ககையில் கணவன் முக்கியமானவன் . விதவையர் அத்தகைய பொறியினை இழந்த விட்ட இணைப்புபெட்டிகள். கணவனை இழந்து விட்ட சோக இழப்பினால் நைத்துருகும் நெஞ்சினர். முகவரியினை காணாமல் தொலைத்துவிட்டு முனகுகின்ற மடல்கள் குவிந்திருக்கம் கொடி மரத்தை ஒத்தவர்கள். இருள் வாழ்விலேயே வாழ்வை நடத்தும் வெள்ளாடை வெளிச்சங்கள் . பெண் இழ வயதிலே விதவையானால் அது துன்பம் மிக்க கொடுமையானதாகும். இவள் வாழ்ந்து பெறாத இன்பத்தை எண்ணி எண்ணி ஏங்கி கண்ணீர் வடிப்பாள். ஆசைகளை இதய தீயில் நாழும் எரிப்பாள். அவள் பருவ மழையில் அழிந்து விட்ட பயிர். பாட முடியாத ஊமைக்குயில். இனியாரும் படிக்கவியலாத பாடநூல் என பலவேறு முகாரிகள் சமுதாயத்தில் மீட்டப்பட்டுகொண்டிருக்கிறது. கவிஞர்கள் பெண்ணை பூவிற்கு ஒப்பிடவது வழக்கம். அனைத்து பூக்களையும் ஒன்றாக கருதாமல் விதவை பூ என்று ஒன்று இல்லாது இருப்பதை உணராதது ஏனோ....
சமுதாயத்தில் தாலி இழந்த விதவை பூக்களுக்கு சோகமே துணையாக அமைந்து விடுகின்றது. விதவைச் சமுதாயம் "தாலி அறுத்தவள்" என ஒதுக்கி வைத்திருப்பதனை இன்றைய நடமுறை வாழ்க்கையிலும் காணலாம். எந்த விதமான மங்கல நிகழ்ச்சிகழுக்கும் அவளின் தலையீடு இல்லாமலே இருக்கும். அவளுடைய இல்லத்தில் நடைபெறும் அத்தகு நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை ...நற்க்காரியங்களுக்கு செல்கையில் எதிரே வந்தால் தீநிமித்தமாக கருதப்படுவாள். கணவனை இழந்த ஒருத்தி தொடர்ந்து அழுவதும் தாலி அறுக்கும் சமயத்தில் மகளிர் அவளது பொட்டினை அழிப்பதும் கைவழயல்களை நெருக்குவதும் வழக்கம். அத்தோடு சேர்ந்து அவள் புறக்கணிக்கப்படுதலும் உரிமைகள் மறுக்கப்படுவதும் தொடர ஆரம்பிக்கிறது. இத்தகு பெண்கள் மனதளவில் மாறிவிட்டால் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்..
விதவை என்பவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம் மரம் பட்டு போகவில்லை... எனவே அம் மரம் மீண்டும் தழைப்பதற்கு வழி உண்டு. வெள்ளை உடை என்பது ஒருவரின் தூய்மையை குறிப்பதாகும். துயரத்தின் அடையாள சின்னமன்று. எனவே வெள்ளை உடையில் உள்ள பெண் மக்களை வண்ண உடையில் குடியமர்த்தலாம். ஒரு மறு மலர்சி உருவாகி அதன் வழி விதவையர் வாழ்வில் ஒரு நற்காலம் உருவாக வேண்டும். அத்தகைய மறுமலர்சி காலம் வரும் வரை அவர்கள் நெற்றியில் பொட்டினை காணமுடியாது. " ஒரு புரட்சி திரு நாளில் ஓடும் குருதியில் இருந்து குங்குமம் திரட்டிக்கொண்டு வந்து விதவை நெற்றியில் வெற்றி திலகம் இடும் வரை நான் அழிக்கப்பட்ட திலகம்தான் ஆனால் என் அடிச்சுவடகள் அழிவதில்லை" என்ற செல்வ கணபதியின் கவிதை திறம்பட சொல்கிறது.
இன்று பெரும்பாலும் வாலிபர்கள் திருமணமாகாத மங்கையர்களையே மணம்முடிக்க நினைக்கிறார்கள் அவ்வாறு இருக்கையில் விதவையை மணந்து வாழ்வழிப்பது என்பதை இயலாத காரியம் என்ற கருத்தினை "கன்னியின் மடியிலேயே கைவைக்கம் கரங்களா... வெள்ளை நெற்றிக்கு வெள்ளிச் சிமிழ் திறப்போம்" என்று மதுமாலிகா அழகாக சொல்லியுள்ளார். எனவே இம் மன நிலையை உவந்து மாற்றிக்கொண்டு விதவையர்கும் வாழ்வு தரும் வலிமையை இளைஞர்கள் பெருக்கிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நூல்களாக மட்டும் தொகுக்கப்படாமல் நிஐமான தாலிகயிறாகவும் மாற வேண்டும்.


நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக