ஞாயிறு, 23 ஜூன், 2013

பாலுறுப்புகள் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே
தெரியும் புகைப்படமே ஒட்டப்பட்டிருக்கிறது - எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில்
படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை
பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில்
பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன்
யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே
தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.

உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும்
முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை
நானகவே எடுத்து நீட்டுகிறேன்.

நெடுந்தீவு முகிலன்

முட்கம்பி வேலியாலும் மண் மூட்டைகளாலும் சுற்றி
அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் குடிசை.

யாரும் நெருங்கி வராத படி மிதி வெடிகளும் தாக்கப்பட்டிருக்கின்றன.

பாட்டன் காலத்த குடிசை அது - அந்த
குடிசைக்குள்தான் நாம் குட்டிகளாக ஈணப்பட்டோம்.

சாணி மொழுகிய திண்ணையின் வாசலில் அம்மா போடும் மாக் கோலத்தின் அடையாளம் இருக்குமா...

தூசி படிந்தாவது அப்பாவின் புகைப்படம் - இப்பவும்
சுவரில் தொங்கிக் கொண்டிருக்குமா...

தேங்காய் எண்ணை தடவி வைத்த மண்வெட்டி
பிக்கான் கத்தி அரிவாள்களாவது அப்படியே இருக்குமா...

கறையான் அரித்து திண்டாலும் பறவாயில்லை
அடகு சீட்டுகளின் - திருமண சான்றிதளின்
பள்ளிக்கூட ஆவணங்களின் - பிறப்பு பத்திரங்களின் ஏதேனும்
அடித்துண்டுகளாவது மிஞ்சி இருக்குமா..

அக்காவுக்கு நிறுவனக்காரர்கள் தந்த தையல் மிசின் - நான்
முதல் மாத சம்பளத்தில் வாங்கி வைத்த கண்ணாடி அலுமாரி
அறையின் மூலையில் கிடந்த நாற்காலி கோழிக் கூடு ஏதாவது
எமக்காக இருக்குமா...

"இன்னும் நாம் எங்கள் குடிசைக்கு செல்லவில்லை" - ஆனாலும்

எங்கள் குடிசை முட்கம்பி வேலியாலும் ...
மண் மூட்டைகளாலும்...
சுற்றி அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதாம்.

நெடுந்தீவு முகிலன்

நீ இப்போது எங்கே இருக்கிறாய் . தொலைபேசி அலறுகிறது
ஒரு தடைவையாவது தூக்கமாட்டாயா..?

தொலை பேசியை வீட்டிலே விட்டுவிட்டு - நீ வெளியே சென்று விட்டாயோ..?

வெளியே செல்வதாயின் - நீ யாருடன் சென்றிருப்பாய்.

ஒரு வேளை தொலைபேசியை கையிலே …வைத்துக்கொண்டு
யாரோடாவது உரையாடிக்கொண்டிருக்கிறாயோ..?

உனது உரையாடலிலாவது நான் ஞாபகப்படுவேனா…?..

நீ ஏன் எனக்கு ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

என்னை எங்கோ எறிந்து விட்டு…நீ காணமல் போனாய்.

காற்றில் உனது வாசனைகளை அனுபவிக்கிறேன்.
கனாக்களில் உனது வருகையை அவதானிக்கிறேன்.

இப்போதைய உனது தோற்றம் எப்படி இருக்குமோ…
மாற்றம் நிகழ - நான் காரணம் ஆனேனோ….?

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும் ...
துண்டித்தாவது விடுவாயா...?

உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு...

நெடுந்தீவு முகிலன்
எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா...
என்னோடு நான் அழுகின்றேனா...
இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது.

சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும்
உரிமையோடு அழுகின்றேன்.
கதவு தட்டப்படும் போதெல்லாம்
கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன்.

என் அழுகைக்கான காரணத்தை
அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை...

இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான்
எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ
எனக்கே தெரியாது.

அழுகையின் தொடக்கமும் முடிவும்
அழுகையாகவே மட்டும் இருக்கிறது.

கிடைக்கும் தனிமைகளை எல்லாம்
அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன்.

அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின்
மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன்.

அழாத நாட்கள் என்று ஒன்றமே
என்னை கடந்ததாக இல்லை...

அழுகையை விட ஒரு நண்பன்
இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை...

அழுவதற்கென்று குளியல் அறையினையே
நான் அதிகம் பயன்படுத்துகின்றேன்.
யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும்
எனக்கு பயமில்லை...

எனது அழுகையினை எனது குளியல்
ஒருபோதும் காட்டியே கொடுத்ததில்லை..

நெடுந்தீவு முகிலன்

மழை பெய்துகொண்டிருந்தது.

சேரிப் புறத்திலே கூரை சரிந்த
பாழ் அடைந்த வீட்டில் வசிக்கும்
உன்னை பார்க்க வருகின்றேன்.
"ஒற்றை குடையோடு"

என்னை தூரத்தில் பார்த்ததும்
ஓடி வருகிறாய்.

மெதுவாய் உன்னை கதுவி என்னில்
சாய்த்துக் கொண்டு - உனது
உறவுக்காரர்களை விசாரித்தேன்.

நீ பேசவே இல்லை மௌனத்திலும்
முனகலோடு என்னை இறுக பிடிக்கிறாய் .
"மழையை ரசித்தபடி"

உன் மேனி குளிரில் நடுங்க
என் நடை தள்ளாடியது.
குடை ஈடாடியது - இருந்தும்
உனது உறவுக்காரர்களை பற்றியே
விசாரித்தேன்.

குடை வழியாக ஒழுகும் மழை நீருடன்
கை நீட்டி விளையாடுகிறாய்.
எந்த சலனமும்மில்லாமலே...

பேசாமலே நானும் நடந்தேன்

எனது மாளிகை நெருங்க - திரும்பவும்
உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.

"திடுக்கிட்டு அம்மா என அலறினாய்"

மழை முற்றாகவே நின்ற பிறகும்
குடைக்குள் தூறியது... அது
அந்த ஆறு வயது சிறுமியின்
விழிகளில் இருந்து....

நெடுந்தீவு முகிலன்

எனக்கும் ஒரு தாய் இருந்தாள். பாழ் அடைந்த வீட்டையும்... கட்டி அவிழ்த்த கந்தல் துணிகளையும்... தாய் நாட்டையும் எனக்காக விட்டிருந்தாள். தாய் நாட்டை தவிர எனக்கு தந்தையோ சகோதரா்களோ இருந்ததாக ஒரு போதும் சொல்லிவைக்கவில்லை... எனது தாயின் விருப்பம் போவலே என் தாயையும் தாய் நாட்டிலேயே புதைத்தேன். என் தாயை புதைத்த என் தாய் நாட்டிலே என்னையும் புதையுங்கள். மண்ணுக்குள்ளேயாவது எமக்காக ஓா் நிரந்தரமான தாய் நாடு இருக்கட்டும் . நெடுந்தீவு முகிலன்