வியாழன், 19 ஜனவரி, 2012


தெருவுக்குப் போனால் திருவிழா போல
எனக்குப் பின்னால் பெரும் கூட்டமே வரும்.

அழகாய் இருக்கிறாய்… அம்சமாய் இருக்கிறாய் -என்று
கதை சொல்லுபவர்களுக்கும் குறைவில்லை…

சேலையில் போனால் - மறைந்திருந்து
எனது இடுப்பை விழிகளால்…
திண்றுகொண்டுமிருப்பார்கள்.

கால்க்கொலுசும்… நெக்கிளசும்… போட்டால்
எனக்கு தூக்கலாக இருக்கும் என்று சொன்னவர்களை… மாலையில்
மனைவிமாரோடு அவதானிக்கையில்
உள்ளுக்குள் சிரித்துமிருக்கிறேன்

கூந்தலை கொண்டை முடிக்க சொன்னவர்களையும்…முடித்த
கொண்டையில் பூக்கள் வைக்க முயற்சி செய்தவர்களையும்
நான் மறந்து விடவில்லை…

காலையில் வரும் பால்க்காரனே…. விசாரிப்பான்
இராத்திரி வேலை எப்படி என்று….

இரவில் என்னோடு ஒட்டி இருந்தவர்களும் - காலையில்
என்னைப்பற்றி ஊருக்குள் பிதற்றிக்கொள்வார்கள்.

வந்தவர்கள் நீங்கள் எல்லோரும்
எனது உள்ளாடை வரை களைந்து
சதைகளை விரல்களாலும் உண்டவர்கள் - ஆனால்
நகங்கள் தந்த காயத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

ஆண்மையில் வெளிவந்த பசலையை…
எனது இடையிலும்… எனது படுக்கை விரிப்பிலும் … தெழித்து விட்டு
முகம் சுழித்துப் போவீர்கள்.

வலியும் குருதியும் கசியும் எனது யோனியை…
அடுத்த இராத்திரிக்குள்
அவசரமாய் சுத்தப்படுத்தியாக வேண்டும்.

வரிசையில் எனது வாடிக்கையாளர்கள்
பணத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடிசையில் எனது குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருக்கிறார்கள்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக