வியாழன், 18 ஆகஸ்ட், 2016



அகப்பை காம்பால் மாவு கிளறி... அரிசிப் பேணியால் கொத்தி ஓலைப்பெட்டியில் அவியும் அம்மாவின் புட்டையும்... பழங்கறிச்சட்டியை நான் பதம் பார்த்ததையும்...

அக்காளும் தங்கச்சியும் மாத்துலைக்கை போட்டு கை வலித்த போது – விரல்களுக்கு நான் நல்லெண்ணை தடவியதையும்...

ஒல்லித்தேங்காய்களை இணைத்து வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது காற்சட்டை கழன்றதை பார்த்து பக்கத்துவீட்டு பார்வதி சிரித்ததையையும்...

புத்து இடித்து கறையான் கொண்டு வந்து அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்...

வேப்பம் பூ வடகமும்.. காத்தோட்டியம் காய் சீவலும்.. அப்பா அப்பாவுக்கு பிடிக்கும்  ஆடி அமாவாசை விரதத்தையும் .
..
ஓடியல் கூழும் ஒற்றைப்பனை கள்ளும் முற்றத்து கொய்யாவின் கீழ் சுற்றி இருந்து பருகியதையும்...

பாட்டிகளின் ஒப்பாரி ஊரில் இருந்தே
யமனை ஓடஓட கலைப்பதையும் ...

“இப்போதும் நினைக்க இனிக்கிறதே”

இதில் ஒன்றையேனும் என் மகன் அனுபவிப்பானா…

“இப்போதே என் வீட்டுக்காரி வெளிநாடு போவோம் என்கிறாள்”

நெடுந்தீவு முகிலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக