வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சந்தியின் தேனீர் கடையின் இருக்கையில் அண்ணாந்து கொண்டிருந்த ஆணி ஒன்று... என் அப்பா ஆசையாய் வாங்கித் தந்த காற்சட்டையின்
பின் பக்கத்தை பலவந்தமாகக் காயப்படுத்தியது.

கைகளால் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் - என் பின்னால்
வந்து கொண்டிருந்த பருவப் பெண்களின் கண்கள் என் பதட்டம் தெரியாமல் சிரித்துக் கொண்டன.

ஓட்டமும் நடையுமாய் வந்து ஆவேசத்தில் கழற்றினேன்

ஆயிரம் திட்டுகளுக்கு பின்புதான் அம்மா கையிலே எடுத்தாள்.

பிறந்த வீட்டில் இருந்து சீதனமாய் கொண்டுவந்து பத்திரமாய் பொத்தி வைத்திருந்த தையல் ஊசியும் பத்துப்போட்ட களைப்பில் செத்துப்போனது.

சித்திரம் போட்ட அந்த அழகோடு பலமுறை பட்டணமும் போய்ப்போய் வந்தேன்

வெயில் பொசுக்கி விடுமென காற்றில் உலரவிடுவேன்
.
பெரும்பாலும் திருநாட்களிலே பாவiனைக்கு உப்படுத்தினேன்

தேசிய உடை என்று... ஊரில் பட்டமும் வாங்கினேன்

பெரியவனான போதும் பாதுகாத்தேன்.

இப்போது என் மனைவி குப்பையில் தூக்கி வீசுகிறாள்

ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய் பொத்திவைத்திருக்கிறேன் 

எனது "அப்பாவின் பழைய ஞாபகத்தை" ...


நெடுந்தீவு முகிலன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக