செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்  அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன்.

கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.

வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பாணையில்  மிஞ்சிய கருக்லை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.

அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்கு கூலிக்கு போவாள்.

கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து  இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.

சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும்  மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டதும்  புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு  தூக்கி அணைப்பாள்.

தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு  ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...

ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...

வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.

எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும்  பிராணியாய் நகர்ந்து கொண்டு ...  பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.

வலியோடு வாழ பழகி விட்ட அவள்  ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் பிரேதமாக கிடந்தாள்.

எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு  ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.

எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என்  அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.

ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம்  கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.

தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன் ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்.

நெடுந்தீவு முகிலன்

3 கருத்துகள்:

  1. கலங்க வைக்கிறது... காலத்தின் கோலம்...குடும்பத்தில் ஆண் சரியில்லாமல் கைம்பெண் ஆகும் அம்மா...குடிகாரன் ஆகும் ஆண் பிள்ளை... கலங்க வைக்கிறது காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
  2. Thozhar vanakkam ungal muganool pakkathil naanum oru rasigai. Enaku oru Sogam kovam varutham ippadi yellame iruku unga kitta Konjam share pannanum thonuthu athuku neenga enakaga oru kavidhai sollavendum endru aasai sollamudiyuma thozhar mm...

    பதிலளிநீக்கு