வியாழன், 18 ஆகஸ்ட், 2016

தென்னோலைக்கு தண்ணி ஊத்தி - முதுகு கூனி
கிடுகு பின்னி கொட்டில் அடைத்து...நான் வாழ கூடு செய்தாய். 

உன் பிணத்துக்கு பண்ணீர் தெளித்து - பாடையில் தூக்கி
கட்டையில் இருத்தி கொள்ளியிட்டு கொழுத்தினேன்.

நெல் குத்தி உன் கை எனக்கு சோறு தந்தது.
நான் உனக்கு வாய்கரிசி தூவி - அந்தியெட்டியில் சுண்ணம் இடித்தேன்.

காடு போய் கடகம் நிறைய - தும்பங்காயோடும் தூதுவளையோடும்  வீடு வருவாய். நான் சுடுகாடு போய் உன் எலும்பையும்  சாம்பலையும் அள்ளி காடுமாத்தினேன்.

உறியில் தொங்கும் உன் கறியை சுவைக்க  பூனையும் புகட்டிலே படுத்திருக்கும் - நான்
அறுசுவையில் சமைத்து உன் உருவப்படத்துக்கு
வாழையிலையில் படைக்கிறேன்.

உயிரோடுருக்கும் போது உன்னை
நான் எங்கும் கூட்டிப்போனதில்லை - உன்
எட்டுச்செலவுக்கு ஊரையே கூப்பிடுகிறேன்.

கழுத்தில காதில ஒன்னுமில்லாம...
ஒத்த சேலையை கிழித்து மாத்தி உடுத்தினாய் - நான்
பட்டு வேட்டியில் பூனுலோடு உனக்கு
புண்ணியானம் செய்கிறேன்.

எதுக்கும் என்னை அழவிடமாட்டாய் - மாத அழிவில்
எல்லாம் நான் உனக்கு இழவு வைக்கிறேன்.

வெறுங்காலோடு வெளியே போய்
வெயிலில் பொசுங்கி வருவாய் - நான்
வீட்டுக்கிரித்தியத்தின் போது ஐயருக்கு...
செருப்பும் குடையும் கொடுத்தேன்.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம்
யாவுமே இருக்கிறது - ஆனால்
என்னோடு நீ இல்லை...

''உறவுகளே உயிரோடு இருக்கும் போது உதவுங்கள்
முதியோர் இல்லத்தை மறவுங்கள்''

நெடுந்தீவு முகிலன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக